எனது அரசியல் பயணத்தையும் அது சார்ந்த பணிகளையும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் நின்றுதான் எமது மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதன் அடிப்படையிலேயே காலத்தின் தேவையுணர்ந்து தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தமிழ் பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாக சிறிதரன் அறிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த மாதம் 29ஆம் திகதி லண்டனுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சிறிதரன், அங்கு முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார்.
அதன் ஓரங்கமாக இரு தினங்களுக்கு முன்னர் பிரித்தானியவாழ் புலம்பெயர் தமிழர்களின் ஏற்பாட்டில் அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய சிறிதரன், ‘ஈழத்தமிழர்களை மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இனத்தின் இருப்புக்காகவும், இறைமைக்காகவும் அரசியல் பணியாற்றுவதற்காகவே நான் இணைந்துகொண்டேன். எனது அரசியல் பயணத்தையும், அது சார்ந்த பணிகளையும் அதே தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் நின்றுதான் எமது மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதனால் இறுதி வரை அந்தக் கொள்கையில் பிறழ்வற்றுப் பயணிக்கத் தலைப்பட்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி அதன் அடிப்படையிலேயே காலத்தின் தேவையுணர்ந்து தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலும் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.