ரஷ்யாவுடன் இணைந்து செயற்படும் இலங்கை படையினர் பற்றிக் கேட்கின்றீர்கள். ஆனால் உக்ரேனுடன் இணைந்து பணியாற்றும் படையினர் பற்றி ஏன் கேள்வி எழுப்புவதில்லை? என்று இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். ட்ஜகார்யன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்தோடு அவர், இலங்கை மக்களின் ஜனநாயக தீர்ப்பினை ஏற்றுக்கொண்டு புதிதாக தெரிவு செய்யப்படும் எந்த ஜனாதிபதியுடனும் பணியாற்றுவதற்கு ரஷ்யா தயாராகவே உள்ளது என்றும் கூறியுள்ளார்.
கொழும்பிலுள்ள ரஷ்ய இல்லத்தில் ரஷ்யாவின் ரி.ஏ.எஸ்.எஸ். செய்தி முகவரகத்தின் 120ஆவது ஆண்டு பூர்த்தியையும் சர்வதேச ஊடகவியலாளர்கள் தினத்தை முன்னிட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததோடு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரஷ்யாவுக்கு நல்ல நண்பர்கள் உள்ளார்கள். அந்தப் பட்டியலில் இலங்கையும் உள்ளது. நாம் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடுவதில்லை.
தற்போது இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. மக்கள் தமது தீர்ப்பினை அளிக்கப்போகின்றார்கள். மக்களின் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்படுவது மிகவும் முக்கியமானது. இலங்கை மக்களின் ஜனநாயக தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதற்கு ரஷ்யா தயாராகவே உள்ளது.
ரஷ்யாவைப் பொறுத்தவரையில், பிறிதொரு நாட்டின் ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக தலையீடுகளைச் செய்வதில்லை. நாம் நிகழ்ந்துகொண்டிருக்கும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.
எம்மைப் பொறுத்தவரையில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் அந்த பிரமுகர் தலைமையிலான அரசாங்கத்துடன் இருதரப்பு உறவுகளை வலுவாகப் பேணி இணைந்து பணியாற்றுவதற்கு தயாராகவே உள்ளோம்.
இலங்கையைப் பொறுத்தவரையில் அணிசேராக் கொள்கையைப் பின்பற்றி சுயாதீனமாகச் செயற்பட்டு வருகின்றது. பூகோள அரசியல் அணிகளைச் சாராது சுதந்திரமாக தீர்மானம் எடுக்கின்றது.
அதனை நாம் வரவேற்கின்றோம். அந்தப்போக்கு தொடர வேண்டும் என்பது எமது எதிர்பார்பாகவுள்ளது. நாம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துடன் கூட்டிணைந்த பயணத்தினை முன்னெடுப்போம் என்றார்.
இதேவேளை, ரஷ்யப் படைகளுடன் இணைந்து உக்ரேனுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள இலங்கைப் படைகளைச் சேர்ந்த வீரர்களின் நிலைமைகள், உக்ரேனுக்கு இலங்கை படைகளின் ஆயுத தளவாடங்கள் வழங்கப்பட்டமை மற்றும் அணு உலைகளை இலங்கையில் ஸ்தாபிக்கும் முயற்சிகள் எந்த கட்டத்தில் உள்ளன என்பது பற்றியும் அவர் கருத்துக்களை வெளியிட்டார்.
கேள்வி: ரஷ்யப்படைகளுடன் இணைந்து போரிடும் இலங்கைப் படையினரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் எந்தக் கட்டத்தில் உள்ளன?
பதில்: ரஷ்யாவுடன் இணைந்து செயற்படும் இலங்கை படையினர் பற்றிக் கேட்கின்றீர்கள். ஆனால் உக்ரேனுடன் இணைந்து பணியாற்றும் படையினர் பற்றி ஏன் கேள்வி எழுப்புவதில்லை? அந்த விடயத்தில் அமைதியாக இருக்காதீர்கள்.
கேள்வி: உக்ரேனுடன் இணைந்து பணியாற்றும் படையினர் பற்றி உக்ரேன் தூதுவரிடம் வினவுவோம். ரஷ்யப் படைகளுடன் உள்ளவர்களின் நிலைமைகளை பற்றி நீங்கள் தெளிவு படுத்த முடியுமா?
பதில்: ஆம், இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் மொஸ்கோ ஆகிய முத்தரப்பினரும் இணைந்து அந்த விடயத்தினைக் கையாளுகின்றார்கள். அது ஒரு உணர்வுபூர்வமான விடயம் என்பதால் நிலைமைகள் பற்றி என்னால் பதிலளிக்க முடியாது. ஆனால் அர்ப்பணிப்பான இருதரப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நீங்கள் புள்ளிவிபரங்கள் உள்ளிட்ட தரவுகள் மற்றும் தகவல்களை பாதுகாப்பு அமைச்சிடம் தான் பெற்றுக்கொள்ள வேண்டும்.
கேள்வி: இலங்கைப் படைவீரர்களுக்கு ரஷ்ய பிரஜாவுரிமை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதா?
பதில்: இந்த கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது. நீங்கள் உங்களுடைய பாதுகாப்பு அமைச்சிலேயே கேட்க வேண்டும்.
கேள்வி: உக்ரேனுக்கு இலங்கையிலிருந்து ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்களே செய்திகளை வெளியிட்டுள்ள நிலையில் அதுபற்றி அரசாங்கத்துடன் பேசினீர்களா?
பதில்: அந்த விடயம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த விடயத்தினால் இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளில் பிரச்சினைகள் இல்லை என்பதை மட்டுமே என்னால் குறிப்பிட முடியும்.
கேள்வி: இலங்கையில் அணுஉலை கட்டமைப்பை அமைப்பதற்கான முயற்சிகள் எந்தக் கட்டத்தில் உள்ளன?
பதில்: முன்னேற்றகரமான நிலையில் தான் அவ்விடயம் உள்ளது. நிகழ்நிலையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இருதரப்பு புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் செயற்பாட்டு நடவடிக்கைகள் ஆரம்பமாகும். குறித்த விடயம் சம்பந்தமாக ஆழமாகச் சென்று கருத்துக்களை வெளிப்படுத்த முடியாது. அது எமது முதலீட்டாளர்களுக்கு சிலவேளைகளில் பாதகமாக மாற்றப்படலாம்.