விசேட தேவையுடையவர்களுக்கு, ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்வதற்கு விசேட போக்குவரத்து வசதிகள் வழங்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த போக்குவரத்து வசதிகளைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை, எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அல்லது உதவித் தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரிகள் விசேட தேவையுடையவர்களாக இருப்பின், அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், விசேட தேவையுடையவர்களுக்கான தற்காலிக அடையாள அட்டையைக் கொண்டுள்ள வாக்காளர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் அவசியமில்லை எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.