முன்னாள் ஜனாதிபதிகள் சந்திக்கின்றனர்!

editor 2

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்கேற்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை திங்கட்கிழமை (07) கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இலங்கை எதிர்கொள்கின்ற பொருளாதார மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இடம்பெறும் இந்த சந்திப்பை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்பாடு செய்துள்ளார்.

அமெரிக்காவின் வரி விதிப்பு உள்ளிட்ட உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இலங்கைக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக மாறியுள்ளது.

இந்த சவால்களை முறையாக எதிர்கொள்ளா விடின் தேசிய பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்பு என்பன சீர்குலைந்து விடும்.

எனவே முன்னாள் ஜனாதிபதிகள் என்ற வகையில், நாடு எதிர்கொள்கின்ற புதிய சவால்களுக்கு ஏற்ப முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட உள்ளது.

அத்துடன், இலங்கையின் பாதுகாப்பு படைகளின் முன்னாள் தளபதிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடையை தொடர்ந்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாடு என்ற வகையில் இதனை எவ்வாறு எதிர்கொள்வது போன்ற விடயங்களும் முன்னாள் ஜனாதிபதிகளின் சந்திப்பில் கவனத்தில் கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article