இந்திய மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது தமிழ்க் காங்கிரஸ் கட்சி உடைந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சி உருவானது. தமிழ்ப் பொது வேட்பாளரை
ஆதரிக்காதுவிடின், இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கும் இதுதான் நடக்கும் – இவ்வாறு தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஞா. சிறீநேசன் எச்சரித்துள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளருக்கான பிரசாரம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பொதுச்சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், ஜீ. ஜீ. பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை
தமிழ்க் காங்கிரஸ் இந்திய மக்களின் குடியுரிமை பறிப்பை ஆதரித்தது. இது
கட்சியின் முடிவுக்கு மாறாக எடுக்கப்பட்ட தீர்மானம். இதனால்தான், அதிலிருந்து வெளியேறி இலங்கை தமிழ் அரசுக்கட்சி உருவானது.
இதன் பின்னர், அந்தக் கட்சி காணாமல் போனது. ஜீ. ஜீ. பொன்னம்பலத்தின் மகன் குமார் பொன்னம்பலம் மன்னிப்புக் கோரியதன் மூலம் ஜீ. ஜீ. பொன்னம்பலத்தின் பாவம் கழுவப்பட்டது.
தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பதே தற்போதைக்கு சரியான முடிவு. தமிழ் அரசுக் கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தமிழ்ப்பொது வேட்பாளரை ஆதரிக்கிறார்கள்.
எனவே, தமிழ் அரசுக் கட்சி தமிழ்ப்பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். இல்லையேல், அன்று காங்கிரஸ்கட்சிக்கு நேர்ந்தது இன்று தமிழ் அரசுக் கட்சிக்கும் நேரும் – என்றார்.