எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரவேசித்து வேட்பாளர்களின் சொத்து விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.
நாட்டின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் அடுத்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அதன்படி, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைக் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.
ஊழல் விசாரணை சட்டத்தின் 88 இன்று 1ஆம் பிரிவின் படி, ஒவ்வொரு வேட்பாளர்களின் சொத்துக்களையும் கடன்களையும் மாத்திரமே வெளியிட முடியும் என அந்த ஆணைக்குழுத் தமது உத்தியோகபூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
01.ரணிலின் சொத்து விபரங்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மாதாந்த வேதனம் 97 ஆயிரத்து 500 ரூபாவாகும்.
அத்துடன், வேதனம் தவிர்ந்த ஏனைய கொடுப்பனவுகளாக 82 ஆயிரத்து 191 ரூபாய் 66 சதம் என அவரது சொத்து விபரத்தில் காட்டப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் அவரது மனைவியின் மாதாந்த வேதனம் ஐந்து இலட்சத்து 76 ஆயிரத்து 785 ரூபாய் 50 சதமாகும்.
அத்துடன் அவர் இரத்தினங்கள் மற்றும் ஆபரணத் துறையில் பணத்தை முதலீடு செய்துள்ளதுடன், அவரிடம் உள்ள ஆபரணங்களின் பெறுமதி 6 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாயெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், ஜனாதிபதியின் மனைவி, அவரது தாயிடமிருந்து பெற்ற 39 இலட்சம் ரூபாய் பெறுமதியான பல நகைகளை வைத்துள்ளதாக ஜனாதிபதியின் சொத்து விபர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குருநாகல் – மல்பொக்குனாவத்தையில் உள்ள காணி, கொழும்பு ஏழில் தற்போது அவர் வசிக்கும் வீடு, நாவல வீதியில் உள்ள அவரது வீடு மற்றும் அதனுடன் தொடர்புடைய காணியொன்றும் சொத்து விபர அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், ஜனாதிபதியிடம் உள்ள ஜீப் ரக வாகனம் ஒன்றும் இரண்டு பென்ஸ் ரக மகிழுந்துகளும் உள்ளதுடன், 18 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தலா இரண்டு வங்கிக்கடன்களை அவர் பெற்றுள்ளதாகவும் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
- சஜித்தின் சொத்து விபரங்கள்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சொத்து விபர அறிக்கையின்படி, சகல கொடுப்பனவுகளுடன் மாதாந்த வருமானமாக 2 இலட்சத்து 95 ஆயிரத்து 681 ரூபா 14 சதத்தைப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமது மனைவியின் அழகுக்கலை நிலையத்திற்காக ஒரு கோடியே 37 இலட்சத்து 68 ஆயிரத்து 532 ரூபாய் 75 சதத்தை அவர் முதலீடு செய்துள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கஹம்பிலியவெடிய பகுதியில் காணியொன்றை வைத்துள்ளார்.
அதேநேரம், தமக்கும் அவரது மனைவிக்கும் 23 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் உள்ளதாக அவர் தமது சொத்து விபர அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சொந்தமான ஒரு பென்ஸ் ரக மகிழுந்தும் லேன்ட் குரூஷர் மற்றும் ப்ராடோ ரக வாகனங்கள் உள்ளிட்ட 5 வாகனங்கள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அனுரவின் சொத்து விபரங்கள்
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க, மாதாந்த வேதனமாக 54 ஆயிரத்து 285 ரூபாவை பெறுவதாகக் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் அவருக்கான கொடுப்பனவுடன் கூடிய மாதாந்த வருமானம் இரண்டு இலட்சத்து இரண்டாயிரத்து 571 ரூபாய் 34 சதமாகும்.
அனுர குமார திஸாநாயக்கவின் மனைவி தொழில் எதனையும் புரியவில்லை எனவும் அவரிடம் சில தங்க நகைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் தற்போது ஒரே ஒரு வாகனத்தை மாத்திரம் பயன்படுத்துவதாகவும், பத்தரமுல்லையில் அவர் தற்போது வசிக்கும் வீடு அவருக்குச் சொந்தமானது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
04.நாமலின் சொத்து விபரங்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் நாமல் ராஜபக்ஷவின் மாதாந்த வேதனம் 54 ஆயிரத்து 285 ரூபாவாகும்.
சகல கொடுப்பனவுடன் அவர் மாதாந்தம் 4 இலட்சம் ரூபாவினை மொத்த வருமானமாகப் பெறுவதாகச் சொத்து விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவரது மனைவி மாதாந்தம் ஒரு இலட்சத்து 15 ஆயிரம் ரூபாவை வேதனமாகப் பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷ, 200 மில்லியன் ரூபாவை கடனாக வழங்கி 3 மில்லியன் ரூபாவை அதற்கான மாதாந்த வட்டியைப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தம்மிடம் மாத்திரம் 88 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் இருப்பதாகவும், தமது மனைவிக்கு 13 கோடியே 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் உள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தமது சொத்து விபர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இரண்டு மகிழுந்துகள், ஒரு பென்ஸ் ரக மகிழுந்து, ப்ராடோ ரக வாகனம் ஒன்றும் ஒரு டிபெண்டர் ரக வாகனம் ஆகியவை தமக்குச் சொந்தமாக உள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தமது சொத்து விபர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகக் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.