இம்முறை ஜனாதிபதித்தேர்தலைக் கண்காணிப்பதற்கும், அதன்மூலம் நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கும் 12 நாடுகளுக்கு அழைப்புவிடுத்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வழமைபோன்று இம்முறையும் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டிருந்தது.
அதன்படி இம்மாதத் தொடக்கத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் இதுகுறித்த நிர்வாகமட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு உள்ளிட்ட 12 நாடுகளின் தேர்தல் கண்காணிப்பு பிரதிநிதிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களும், ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் பிரதிநிதிகள் குழுவும் எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலைக் கண்காணிப்பதற்காக நாட்டுக்கு வருகைதரவிருப்பதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.