எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச புதன்கிழமை (14) தமிழ் பொதுக்கட்டமைப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு அழைப்புவிடுத்துள்ளார்.
ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ் பொதுக்கட்டமைப்பினால் தமிழ்மக்கள் சார்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பொதுவேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கின்றார்.
தமிழ் மக்களின் கோரிக்கைகள் மற்றும் அபிலாஷைகளுக்கான குறியீடாகவே இப்பொதுவேட்பாளர் களமிறக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கும் தமிழ் பொதுக்கட்டமைப்பு, இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடவிருக்கும் பிரதான வேட்பாளர்கள் தமிழ் மக்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்த உத்தரவாதத்துடன் தம்மை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்த விரும்பினால், அவர்களுடன் பேசுவோம் என அறிவித்திருக்கிறது.
அதற்கமைய இம்முறை தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் பொதுக்கட்டமைப்பினருடனான சந்திப்புக்கு அழைப்புவிடுத்திருந்தார். அதன்படி திங்கட்கிழமை (12) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அச்சந்திப்பில் தமிழ் பொதுக்கட்டமைப்பின் சார்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சிலர் பங்கேற்றிருந்ததுடன், அவர்களுடன் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ புதன்கிழமை (14) தமிழ் பொதுக்கட்டமைப்பினரைச் சந்திப்பதற்கு அழைப்புவிடுத்துள்ளார். இச்சந்திப்பு புதன்கிழமை (14) காலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.