சமஷ்டி ரீதியிலான ஆட்சி முறைமையே தங்களது இறுதித் தீர்மானமென தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கைக்கு அமைய, இன்று (12) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக டெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் மற்றும் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் வேந்தன் மற்றும் செயலாளர் துளசி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
தங்களுடைய கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்காமையின் காரணமாகவே தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரைத் தேர்தலில் களமிறக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியிடம் குறிப்பிட்டதாகவும் டெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார்.