IMF நிபந்தனைகளில் மாற்றங்களை கொண்டுவருவது தொடர்பில் ஜனாதிபதி எச்சரிக்கை!

editor 2
Ranil Wickremesinghe, Sri Lanka's president, speaks during the Nikkei Forum Future of Asia in Tokyo, Japan, on Thursday, May 25, 2023. The forum organized by Nikkei Inc. will continue through May 26. Photographer: Kiyoshi Ota/Bloomberg via Getty Images

எதிர்க்கட்சிகள் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றும் அதில் திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் சற்றும் சிந்திக்காமல் பேசி வருகின்றன. அவ்வாறு நடந்தால் என்ன நடக்கும் என்று யோசித்துப்பாருங்கள்? இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வரிசை யுகமே மீண்டும் உருவாகும். ஆகவே இந்த நிபந்தனைகளை சரியாக முன்னெடுத்து வந்தது யார் என்பதை அறிந்து அவர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மஸ்கெலியா தொகுதி வர்த்தகர்களுடனான சந்திப்பு சனிக்கிழமை (10) மாலை லா அடம்ஸ் விருந்தகத்தில் இடம்பெற்ற போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
மஸ்கெலியா தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே.பியதாஸ தலைமையிலும் அட்டன் நகர் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் பாலகிருஷ்ணன் திருச்செல்வத்தின் ஏற்பாட்டிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் அட்டன், மஸ்கெலியா,நோர்வூட், பொகவந்தலாவை பிரதேச வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரண்டு வருடங்களுக்கு முன்பு எமது நாடு எப்படி இருந்தது என்பதை நான் புதிதாக கூறத்தேவையில்லை. இப்போது நாடு இயல்பு நிலைமைக்கு வந்துள்ளது. ஆனால் முழுமையாக நாம் மீளவில்லை. உலக நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக நாம் கடன்களை பெற்றோம். அவற்றை முறையாக திருப்பி செலுத்துவதற்கான நிபந்தனைகளை மிகவும் கவனமாக நிறைவேற்றினோம்.

அந்த நாடுகளுடனும் நாணய நிதிய அதிகாரிகளுடன் ஒப்பந்தங்கள் குறித்து மிகவும் சுமூகமாக கலந்தரையாடினோம். இந்த ஒப்பந்தங்களை நாம் கவனமாக கடைப்பிடித்தால் எதிர்காலத்தில் மேலும் உதவிகளைப் பெறலாம். ஆனால் அவற்றை மீறினால் எதிர்காலத்தில் எமக்கு எந்த வித உதவிகளும் கிடைக்கப்பெற மாட்டாது.

பாருங்கள் நாம் 17 தடவைகள் நாணய நிதிய ஒப்பந்தங்களை மீறியுள்ளோம். இனி அப்படி இடம்பெற்றால் எமது எந்த அனுதாபங்களையும் எவரும் காட்ட மாட்டார்கள். ஆனால் எதிர்க்கட்சிகள் இதை விளங்கிக்கொள்ளாமல் அவற்றில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று பேசுகின்றனர். குறித்த நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமையவே நாம் பயணிக்க வேண்டியுள்ளோம். மீறினால் மீண்டும் வங்குரோத்து நிலைமைக்கே செல்ல வேண்டும்.

ஆகவே எதிர்வரும் காலத்தில் நாம் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். இங்கே எம்மத்தியில் உள்ள கேள்வி என்னவென்றால் கடின நிலைமையிலிருந்து மீண்ட நாம் மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்ல வேண்டுமா இல்லையென்றால் முன்னேற்றத்தை நோக்கி செல்லப்போகின்றோமா என்பது தான்.

எமக்கு போதுமான வருமானம் இல்லாத காரணத்தினாலேயே அந்நிய செலாவணியை நம்பியிருக்கின்றோம். பொருட்களை இறக்குமதி செய்கின்றோம். ஆனால் அடுத்த பத்து வருடங்களில் நாம் ஏற்றுமதிசார் பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைய முடியாவிடின் மீண்டும் எமது நாடு பொருளாதார சிக்கல்களுக்கு முகங்கொடுக்கும்.

சிந்தித்துப்பாருங்கள், நாம் பழைய கடனையும் செலுத்த வேண்டியுள்ளது, எதிர்காலத்தில் பெற வேண்டிய கடன்களையும் செலுத்த வேண்டியுள்ளது. இதுவே தற்போது எம்மத்தியில் இருக்கக் கூடிய பிரதான இரு பிரச்சினைகள். இவை உங்களுடைய எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகள். ஆகவே தப்பித்து ஓடியவர்கள் இந்த பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க முடியுமா என்பதை சிந்தித்துப்பாருங்கள்.

Share This Article