வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்தபோதே பிளவையும் நாம் எதிர்பார்த்தோம். அரசியல் ரீதியாகவும் – சித்தாந்த ரீதியாகவும் பிரிந்திருந்தாலும் தனிப்பட்ட முறையில் நாம் பிரிக்கப்படவில்லை – அந்த உறவு இன்றும் உள்ளது என்று கூறியுள்ளார் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம். பி.
தற்போது கட்சியிலிருந்து சென்று விட்டோம் என்று கூறுபவர்கள் எங்களுடைய வீட்டுக்கு வந்து சென்றவர்கள்.
சிலர் நேற்றிரவு (நேற்றுமுன்தினம்) மீண்டும் வந்தார்கள். இன்று (நேற்று) காலையும் சந்தித்தேன். இந்த அரசியல் நன்கு பழக்கப்பட்டது. இவ்வாறு நடப்பது இது ஒன்றும் முதல் தடவை அல்ல என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளரை நிறுத்தவுள்ளதாக திங்கட்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதையடுத்து கட்சி பிளவடைந்தது. இந்த சூழலில் நேற்று அவர் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், ‘கட்சியில் பிளவு ஏற்படும் என்பதை நாங்கள் ஆரம்பத்திலேயே எதிர்ப்பார்த்தோம். தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுக்கும்போது பொதுவாக வரலாற்றில் எந்தவொரு கட்சியினதும் பல தரப்பட்ட கருத்துகள் காணப்படுகின்றன. கலந்துரையாடி தமது கருத்துகள் தொடர்பில் வினவுவார்கள்.
இது ஒரு பொதுவான விடயம். நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கட்சியை உறுதிப்
படுத்திக் கொண்டு செயல்பட்டு வருகின்றோம்.
கட்சியை உறுதிப்படுத்தி எங்கள் கொள்கைகளை வெல்ல நாங்கள் செயல்பட வேண்டும். நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியை வெறுக்கும் பக்கத்தில் நிற்கின்றோம். அதனை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்களுடனேயே கொடுக்கல் – வாங்கல் உள்ளதே தவிர, விரும்பிய அரசியலில் அல்ல. சில நேரங்களில் விருப்பு அரசியலில் ஈடுபட இதுவே, சிறந்த நேரம் என சிலர் நினைக்கலாம். தேசிய வேலைத்திட்டத்துடன் பயணித்த தலைவர்கள் வெற்றி பெற்று சரித்திரம் படைத்தனர் – என்றும் கூறினார்.