பொலிஸ்மா அதிபர் தொடர்பான குழப்பநிலை தொடர்ந்தும் நீடிக்கின்ற அதேவேளை நீண்டகால முட்டுக்கட்டை நிலை பொலிஸாரின் ஏனைய செயற்பாடுகள் மீது தாக்கத்தை செலுத்தலாம் என உயர்அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்கள், ஆவணங்களில் கையொப்பமிடுதல், கேள்விப்பத்திரங்களை கோருவது போன்ற ஏனைய செயற்பாடுகள் பாதிக்கப்படலாம் என பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகளிற்கு பொலிஸ்மா அதிபர் அல்லது பதில்பொலிஸ்மா அதிபரி;ன் வழிகாட்டுதல்கள் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவாரகாலத்திற்கு தற்போதைய குழப்பநிலையை எங்களால் சமாளிக்க முடியும் என தெரிவித்துள்ள அவர் எங்கள் நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து குறுகிய காலத்திற்கு அரசாங்கத்தினது வழிகாட்டுதல்களோ ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களோ தேவைப்படாது என குறி;ப்பிட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபரோ பதில்பொலிஸ்மா அதிபரோ இல்லாதது நிலைமையை குழப்பரமானதாக மாற்றியுள்ளது என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் கடந்த வாரம் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் நிலாந்தஜெயவர்த்தன கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளதை தொடர்ந்து பிரதிபொலிஸ்மா அதிபர் நிர்வாகம் என்ற பதவி வெற்றிடமாகவுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தின் இரண்டு முக்கிய பதவிகளும் வெற்றிடமாக உள்ளமை முன்னர் ஒருபோதும் இடம்பெறாத விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபர் இல்லாமல் பொலிஸ்திணைக்களம் பிரச்சினைகளை எதிர்கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொலிஸ்மா அதிபரும் பதில் பொலிஸ்மா அதிபரும் இல்லாததால் பாதுகாப்பு கரிசனைகள் உருவாகலாம் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.