திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் பகுதியில் இரவோடு இரவாக பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி துப்பரவு செய்யப்பட்டதால் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகின்றது.
குச்சவெளி – இலந்தைக்குளம் 5 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று வியாழக்கிழமை (25) இரவில் இருந்து பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் பௌத்த விகாரை அமைப்பதற்காக மக்களுடைய காணி துப்பரவு செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வயலுக்கு சென்ற மக்களால் குறித்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை அவதானிக்கப்பட்டு மக்களுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, இன்று வெள்ளிக்கிழமை (26) குச்சவெளி பிரதேச செயலாளரின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இலந்தைக்குளம் பகுதியில் காலாகாலமாக வாழ்ந்து வந்த மக்கள் யுத்தத்தின் காரணமாக 1990ஆம் ஆண்டு மற்றும் அதனை அண்டிய காலப்பகுதிகளில் இடம்பெயர்ந்திருந்ததாகவும், அப்பகுதியில் மீள குடியமர்வதற்கான கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நீண்டகாலமாக முன்வைத்துவருவதாகவும் இந்நிலையில் தற்போது அப்பகுதி ஆக்கிரமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
குறித்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான பிறப்பு அத்தாட்சி பத்திரம், இறப்பு அத்தாட்சிப் பத்திரம், காணி ஆவணங்கள் உட்பட உடைந்த பாடசாலைக் கட்டடம் மற்றும் அரச கட்டடங்களும் இன்னும் ஆதாரங்களாக காணப்படுவதாகவும், வயல் வரம்புகளும் இன்னும் அழியாமல் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மண்வெட்டிக்காக பிடிக்கம்பு வெட்டினாலே கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கும் அரச திணைக்களங்கள் பாரிய இயந்திரங்களினாலும், இயந்திர கை வாள்களினாலும் பாரிய பச்சை மரங்களை வெட்டி அழிப்பதற்கு எதிராக ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.