விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறிப்பாக, தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் ஊடாக வட்டியில்லாக் கடன்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்கு இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவை பங்களிப்பை வழங்குகின்றன. மேலும் எதிர்காலத்தில் மக்கள் வங்கியுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 650 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டாம் கட்டமாக 10 மில்லியன் ரூபா பெறுமதியான விவசாய நவீனமயமாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்த 75 பிரதேச செயலகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
விவசாய நவீனமயமாக்கல் கடன் திட்டத்தின் கீழ் வட்டியில்லாக் கடன் பொறிமுறைமையொன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
கடன் சலுகைக் காலம் அதிகபட்சம் 06 மாதங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடன் சலுகைக் காலம் உட்பட கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய அதிகபட்ச காலம் 05 வருடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.