நாட்டில் இணையம் ஊடாக சட்டவிரோதமான முறையில் நிதி கொடுக்கல் – வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்ட 46 கணக்குகளில் 5000 கோடி ரூபாய் பணம் இருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 5 பேர் மற்றும் வெளிநாட்டவர்கள் 35 பேர், நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட சந்தேக நபர்களில் சீனா, பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா, அல்ஜீரியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த இளைஞர் மற்றும் யுவதிகள் உள்ளடங்குவர்.
கடந்த மாதம் 22ஆம் திகதி காலை 10.30 முதல் இரவு 10.30 வரையில் மாத்திரம் 880 இலட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகையை இந்தக் குழு பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் முதலாவது சந்தேக நபரான பிரவீன் பண்டார முதன்மையாக செயல்பட்டுள்ளார்.
இதற்காக அவர் டுபாயில் பயிற்சி பெற்றிருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பகுதியில் உள்ள 30 அறைகள் கொண்ட ஹோட்டல் முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்
அதற்காக மாதாந்தம் 80 இலட்சம் ரூபாய் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான இலங்கைப் பணம் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பணம் அரச பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிங்கப்பூர் மற்றும் சீனாவைச் சேர்ந்த குழுவொன்று விசாரணைகளுக்காக இலங்கை வரவுள்ள நிலையில் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கக்கூடாது என திணைக்களம் கோரியுள்ளது.
அத்துடன், சந்தேகநபர்கள் 4 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 36 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்ட போது அவர்கக்காக சுமார் 40 சட்டத்தரணிகள் முன்னிலையாகினர் என்று தெரிய வருகின்றது.