13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் – மன்னாரில் சஜித்!

13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன் - மன்னாரில் சஜித்!

Editor 1

நாட்டின் சட்டப் புத்தகத்தில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன். எமது கடல் வளங்கள் கொள்ளை போவதைத் தடுக்கும் வகையில் நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுப்பேன் – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று மன்னாரில் தெரிவித்தார்.

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மன்னார் மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்தார்.

இதன்போது, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பணிமனைக்கு சென்ற அவர் அந்தக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனை சந்தித்து உரையாடினார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

மன்னாரின் அபிவிருத்திக்காக மீண்டும் இங்கு வருகை தந்துள்ளேன். வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு வழங்குவதே எனது நோக்கமாக உள்ளது. முக்கியமாக, நாட்டின் சட்டப் புத்தகத்தில் உள்ள 13ஆவது
திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவேன்.

மேலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் பிரச்னையை தீர்த்து அவர்களுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுப்பேன்.

எமது கடல் வளங்கள் கொள்ளையிடப்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தரத் தீர்வை பெற்றுக்கொடுப்பேன்.

வடக்கு மக்களின் அரசியல் உரிமை, சமூக உரிமை, பொருளாதார உரிமை, மனித உரிமைகள் உட்பட அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் செயல் திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளேன்.

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு தாய் பிள்ளைகள் போல் எமது பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு – இந்த நாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லவுள்ளேன். இந்த நாடு வங்குரோத்து அடைந்த நிலையில்
உள்ளது. அதற்கு நாங்கள் ஒரு தாய் பிள்ளைகள் போன்று தீர்வு பெற்றுக் கொள்வது அவசியம்.

மன்னார் மாவட்டத்தில் மட்டுமின்றி வடக்கு, கிழக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அதிகமாக உள்ளன.

இந்தக் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கான சிறந்த திட்டங்கள், இலங்கை முழுவதும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான சிறப்பு திட்டங்களை கொண்டு வரவிருக்கிறேன்.

நுண்கடன் திட்டம் ஊடாக பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக்கொடுக்கவேண்டியுள்ளது மேலும், வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அவர்களை மையப்படுத்தி நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்க எண்ணியுள்ளேன்.

மீனவர்களின் பிரச்னைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க எண்ணியுள்ளதோடு அதனை வடக்கு – கிழக்கை மையப்படுத்தி தீர்வு பெற்றுத் தருவேன்.

மாகாண சபை முறைமையை வலுப்படுத்தி அதை நிச்சயமாக பாதுகாக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.

அத்தோடு, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைய பல செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். மறைந்த எனது தந்தையார் ரணசிங்க பிரேமதாஸ மாகாண சபையை இல்லாது ஒழிப்பதற்கு ஒருபோதும் முயற்சிக்கவில்லை.

மாகாண சபை கட்டமைப்பை பாதுகாக்கவும் நான் முயற்சிகளை மேற்கொள்வேன் – என்றார்.

Share This Article