பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்தக் கட்சியாலும் வெற்றி பெற முடியாது – பிரசன்ன ரணதுங்க!

பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்தக் கட்சியாலும் வெற்றி பெற முடியாது - பிரசன்ன ரணதுங்க!

Editor 1

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பு இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சியாலும் வெற்றி பெற முடியாது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தது சிறந்த தீர்மானம் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஜனாதிபதிக்கு மக்கள் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

திவுலபிடிய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14)இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்த ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு எதிராக ஒருபோதும் செயற்படவில்லை. 2015ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் எடுத்த தவறான தீர்மானத்தை 2019ஆம் ஆண்டு திருத்திக்கொண்டார்கள்.

பூகோள மட்டத்தில் பொருளாதாரம் மற்றும் சமூக கட்டமைப்பில் ஏற்பட்ட தாக்கத்தை நாடு என்ற ரீதியிலும் நாமும் எதிர்கொண்டோம். கொவிட் பெருந்தொற்று தாக்கத்துக்கு மத்தியில் நாட்டை மூடினால் பொருளாதார நெருக்கடி தீவிரமடையும் என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டார்கள்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்காவிடின் நாட்டு மக்கள் உயிரிழப்பார்கள் என்று வைத்திய நிபுணர்கள் குறிப்பிட்டார்கள். பொருளாதாரமா, மக்களின் உயிரா என்ற தீர்மானமிக்க நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களின் சுகாதார ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தீர்மானம் எடுத்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களை யுத்தத்தில் இருந்து பாதுகாத்தார். கோட்டபய ராஜபக்ஷ கொவிட் பெருந்தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்தார். இதனை எவராலும் மறுக்க முடியாது. பொருளாதார நெருக்கடியை ஒரு தரப்பினர் அரசியல் நெருக்கடியாக மாற்றியமைத்தார்கள்.

திட்டமிட்ட வகையில் போராட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தபோது எவரும் சவால்களை பொறுப்பேற்க முன்வரவில்லை. நெருக்கடியான சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம். எமது தீர்மானம் சிறந்தது என்பதை நாட்டு மக்கள் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தீர்மானமிக்கது. பொதுஜன பெரமுனவின் ஆதரவு இல்லாமல் எந்த அரசியல் கட்சியாலும் தேர்தலில் வெற்றிபெற முடியாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டு மக்கள் நன்றி கடன்பட்டுள்ளார்கள். ஆகவே, அரசியலில் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.

Share This Article