ஜனாதிபதி தேர்தலுக்கான திகதிகள் உள்ளிட்ட உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் இம்மாத நடுப்பகுதியில் அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்தோடு, ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சுப்பணிகளுக்கு 600 – 800 மில்லியன் வரை செலவிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆணைக்குழுவின் தவிசாளர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பைச் செய்வதற்கான அதிகாரம் ஆணைக்குழுவிற்கு நாளை மறுதினம் முதல் கிடைக்கவுள்ளது. அந்த வகையில், இம்மாத நடுப்பகுதியில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மற்றும் வாக்கெடுப்புத் திகதிகளை அறிவிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
இதேநேரம், எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளோம். அதேபோன்று உதவித் தேர்தல் ஆணையாளர்கள், மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களையும் நடத்தவுள்ளோம்.
மேலதிகமாக, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. உயர்நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பிக்கும் வரையில் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் எமக்கு சட்ட ரீதியான எந்தப் பிரச்சினைகளும் இல்லை.
எவ்வாறாயினும், உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் தொடர்பில் நாங்கள் அதிகமான கரிசனைகளையும் கொண்டிருக்கின்றோம் என்றார். அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்காக அச்சுப்பணிகளை மேற்கொள்வதற்கு 600 முதல் 800 மில்லியன் வரை செலவிடப்படும் என்று அரசாங்க அச்சுப்பொறியாளர் கங்கா கல்பானி லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வாக்குச் சீட்டின் அளவைப் பொறுத்து தொகை மாறுபடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு தேர்தல்கள் அறிவிப்பின் பின்னரேயே வாக்குச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்கள் அச்சிடுவதற்கான அதிகாரம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதேநேரம், தேர்தல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் அரச அதிகாரிகளுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தாள்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டுவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.