முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங் கட்ட அகழ்வாய்வின், ஐந்தாம்நாள் அகழ்வாய்வுப்பணிகள் ஜூலை – 09 செவ்வாய்கிழமை செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்றது.
இந் நிலையில் குறித்த கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வாய்வுகள் இடம்பெறும் இடத்திற்கு ஐக்கியநாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்தின், மனித உரிமைக்கான அலுவலர் லுடியானா ஷெல்ரின் அகிலன் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன், குறித்த அகழ்வாய்வு நிலைமைகள் தொடர்பில் பேராசியர் ராஜ்சோமதேவ, சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன் ஆகியோரிடம் கேட்டறிந்துகொண்டார்.
இந்நிலையில் இவ்வாறான சர்வதேசஅமைப்புப் பிரதிநிதிகளின் கண்காணிப்பு விஜயத்தால் தமக்கு இந்த அகழ்வாய்வின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவும், இந்த அகழ்வாய்வின்மீது தொடர்ந்தும் சர்வதேச கண்காணிப்பு அவசியமெனவும் தமிழ்தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம்கட்ட, ஐந்தாம்நாள் அகழ்வாய்வுப்பணிகள் தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவதலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.
அத்தோடு ஐ.நாவின் இலங்கை அலுவலக மனித உரிமை அலுவர் லுடியானா ஷெல்ரின் அகிலன், முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,கொக்குத்தொடுவாய் கிராம அலுவலர் உள்ளிட்ட தரப்பினரின் கண்காணிப்புகளுக்கு மத்தியிலும் இந்த அகழ்வாய்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த ஐந்தாம் நாள் அகழ்வாய்வுப்பணிகளில் முல்லைத்தீவு – கொக்கிளாய் பிரதானவீதியின் ஐந்தாவது மண்படை அகழப்பட்டு அகழ்வாய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் குறித்த ஐந்தாம்நாள் அகழ்வாய்வுகளில் சில மர்மப்பொருட்கள் பகுதியளவில் வெளிப்பட்டுத் தென்படுவதாக இந்த அகழ்வாய்வு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணி எஸ்.நிரஞ்சன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். ஆறாம்நாள் அகழ்வாய்வுப் பணிகளின் பின்னரே குறித்த மர்மப்பொருட்கள் என்ன என்பதை முழுமையாக இனங்காணமுடியும் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை இந்த மனிதப்புதைகுழி இனங்காணப்பட்டதிலிருந்து, இந்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வு விவகாரத்திற்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்பதை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமிழ் மக்கள்பிரதிநிதிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந் நிலையில் மனிதப்புதைகுழியின் முன்றாம்கட்ட, ஐந்தாம்நாள் அகழ்வாய்வுப்பணி இடம்பெறும்போது குறித்த இடத்திற்கு ஐ.நா இலங்கை அலுவலக மனிதஉரிமை அலுவலரின் கண்காணிப்பு விஜயம் குறித்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் முல்லைத்தீவு மாவட்டத் தலைவி மரிய சுரேஸ் ஈஸ்வரி, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறான சர்வதேச பிரதிநிதிகள் கண்காணிப்பது இந்த அகழ்வாய்வின்மீது தமக்கு நம்பிக்கை ஏற்படுவதாக அமைவதாகவும், தொடர்ந்தும் இந்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் சர்வதேச கண்காணிப்பு தொடர்ந்தும் இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.