ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான அரசியல் கூட்டணியை பொதுஜன பெரமுன நிராகரிப்பதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக பொதுஜன பெரமுன கட்சிக்கு எந்த வகையிலும் அறிவிக்க வில்லை. தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத் தப்படுவதற்குத் தகுதியானவர் ரணில் விக்ரமவிங்கவே என பொதுஜன பெரமுனவில் உள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்த போதிலும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக எமதுக் கட்சிக்கு அவர் அறிவிக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுனவில் இடம்பெற்று வரும் கலந்துரையாடலில் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் குறித்து எவ்வித கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை.
ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கையானது சந்தையின் தேவைக்கேற்ப கையாளக்கூடிய பொருளாதாரம். அந்த பொருளாதாரக் கொள்கையின் பிரகாரம் நாட்டைப் பற்றியோ நாட்டு மக்களைப் பற்றியோ அவருக்கு அக்கறை இல்லை.
ஜனாதிபதியின் பொருளாதார கொள்கையின் அடிப்படையில் அவருடன் அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்கு பொதுஜன பெரமுன இணக்கம் வெளியிடாது-என்றார்.