இரண்டு வருடங்களாக நான் அரசியலில் ஈடுபடவில்லை – சபையில் ஜனாதிபதி!

இரண்டு வருடங்களாக நான் அரசியலில் ஈடுபடவில்லை - சபையில் ஜனாதிபதி!

editor 2

கடந்த இரண்டு வருடங்களாக நான் அரசியலில் ஈடுபடவில்லை. நான் எப்போதும் நாட்டுக்காகவே தீர்மானங்களை எடுத்து வருகிறேன். அரசியல் அதிகாரத்துக்காகவோ அல்லது பிரபல்யத்துக்காகவோ முடிவுகளை எடுப்பதில்லை – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கடன் மறுசீரமைப்பு செயல்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட உரையை ஆற்றினார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தனது உரையில் தெரிவித்த முக்கிய அம்சங்கள் மட்டும் வருமாறு,

எமது வெளிநாட்டு கடன் 3 ஆயிரத்து 700 கோடி அமெரிக்க டொலர்களாகும். இதில் ஆயிரத்து 60 கோடி டொலர் இரு தரப்பு கடன், ஆயிரத்து 170 கோடி டொலர்கள் பல்தரப்பு கடன், ஆயிரத்து 470 கோடி டொலர்கள் வணிகக் கடன், ஆயிரத்து 250 கோடி டொலர்கள் கடன் பிணை முறிகள் மூலம் பெறப்பட்டவை. கடனை வெட்டிவிடுதல், கடன் சலுகை காலம், கடனை மீளச் செலுத்தும் கால அவகாசத்தை நீடித்தல் உள்ளடங்கலான கடன் மறுசீரமைப்பு மற்றும் அதடனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றத்திலும், வெளியிலும் பல தரப்பினர் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இவற்றில் சில விடயங்கள் உண்மைக்குப் புறம்பானவை. சில விடயங்களில் பாதி உண்மையே இருந்தது.

தற்போது நாம் எதிர்கொண்டுள்ள பூகோள அரசியல் முன்னேற்றங்களுக்கு மத்தியிலேயே நாம் இந்த சிக்கலான சவாலை சந்தித்தோம். இதனால், எமது இலக்குகளை நோக்கி பயணிப்பது இலகுவானதாக அமையவில்லை. கஷ்டங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் ஐ.எம்.எவ். வேலைத் திட்டத்தை ஆரம்பித்து 15 மாதங்கள் என்ற குறுகிய காலத்துக்குள் வெளிநாட்டு இரு தரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வர முடிந்தது.

அடிப்படை கடனை மீள செலுத்துவதற்காக 2028ஆம் ஆண்டு வரை கால அவகாசம் எங்களுக்கு கிடைத்துள்ளது.

வட்டி வீதம் குறிப்பிடத்தக்களவு குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வட்டி வீதம் 2.1 அல்லது அதற்கு குறைந்தளவில் தக்கவைக்க அனுமதி கிடைக்கும்.

கடனை முழுமையாக செலுத்தி முடிக்க 8 வருட கால அவகாசம் கிடைத்துள்ளது.

இன்னுமொரு வகையில் கூறுவதாயின், 2043ஆம் ஆண்டு வரை அவகாசம் கிடைத்துள்ளது. கடன் சேவை காலத்தை நீடிப்பதுடன் அடிப்படை கடனை மீளச் செலுத்தும் தொகையை தொடர்ந்து அதிகரிக்க முடியும். இதன் பலனாக வட்டியாக செலுத்த வேண்டிய 500 கோடி டொலர்களை சேமித்துக் கொள்ள முடியும்.

எனவே, பொருளாதாரத்தை வழமை நிலைக்குக் கொண்டுவர வேண்டும்.
அந்நியச் செலாவணியை அதிகரித்து கொள்ள வேண்டும். அரச அடிப்படை நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். அத்துடன் கடனை மீளச் செலுத்தும் இயலுமையை அதிகரிக்க வேண்டும். இவற்றின் ஊடாக எதிர்காலத்தில் வலுவான நிலையில் இருந்து கடன் செலுத்துவதற்கான வாய்ப்பு கிட்டும். தற்போது நாம்

ஆயிரம் கோடி டொலர் உள்நாட்டு இரு தரப்புக் கடன்
மறுசீரமைப்புப் பணிகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளோம்.

அடுத்தகட்டமாக ஆயிரத்து 470 கோடி அமெரிக்க டொலர்கள் வணிகக் கடன்களை மறுசீரமைக்க வேண்டியுள்ளது. இதற்கான பேச்சுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்னும் சில நாட்களில் அந்த பணிகளை நிறைவுசெய்ய முடியும் என எதிர்பார்க்கிறோம்.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் பல வழிகளில் சலுகைக் கடன்களைப் பெற்றுத் தந்தன. அதுதவிர வேறெந்த நாட்டிற்கும் நீண்ட கால கடன்களை வழங்க முடியாத நிலை இருந்தது. சில அரசியல் குழுக்கள் எமது வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பில் சமூக வலைத்
தளங்களில் போலிச் செய்திகளை பரப்பிவருகின்றன.

வெளிநாட்டு கடன்கள் தொடர்பில் சமூகத்தில் பரப்பப்படும் பொய்கள் தொடர்பாக சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். இலங்கையைப் போன்று அபிவிருத்தியடைந்து வரும் நாடொன்றால் தனியாக இயங்க முடியாது. தனியாக இயங்கும் வகையில் வருமானத்தை நாம் ஈட்டவும் இல்லை.

அதனால், நாம் கடன்களையும், நிவாரணங்களையும் பெறநேரிடும். ஆனால், நாளாந்தம் உணவுத் தேவைக்காகவும், சம்பளம் வழங்கவும் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. சுதந்திரத்தின் பின் எமது நாடு செய்த பெரும் பிழை இதுவாகும்.

சில அரசியல் குழுக்கள், ஆட்சிக்கு வந்தவுடன் சம்பளத்தை அதிகரிப்போம் என்று கூறுகின்றனர். வரியை குறைப்போம், சலுகைகளை வழங்குவோம் என்று ஆயிரக்கணக்கான வாக்குறுதி களை வழங்குகிறார்கள். ஆனால், அதற்கான பணத்தை எப்படி திரட்டப்போகிறார்கள் என்பது தொடர்பில் ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. ஆனால், நான் அரசாங்கத்தை பொறுப்பேற்ற பின்னர் பல அரசாங்கங்கள் செய்த தவறுகளை நிறுத்தினேன்.

இலங்கை அன்னையை ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து எவ்வாறாவது மீட்டு வருவேன் என சபதமெடுத்து இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

அனைத்து மக்களும் இந்த வேலைத் திட்டத்துக்கு ஆதரவளித்தனர். அவர்க
ளுக்கு மீண்டும் நன்றி கூறுகிறேன்.

தொங்கு பாலத்தின் கஷ்டமான பயணத்தில் தொடர்ந்து செல்ல வேண்டியுள்ளது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் திரும்பிவர முடியாது. மீண்டும் வேறு வழியில் திரும்பிச் செல்ல முற்பட்டால், ஓரிரு மாதங்களுக்குள் மீண்டும் வரியுகத்துக்கு செல்ல நேரிடும். மிகப்பெரிய ஆபத்துக்குள் நாடு தள்ளப்படும்.

25 – 30 வருடங்களுக்கு மீட்டெடுக்க முடியாத நிலைக்குள் நாடு தள்ளப்படும். நாட்டுக்காகவும் நாட்டின் எதிர்காலத்துக்காகவும் அந்த எண்ணத்தை மாற்றிக்
கொள்ளுமாறு நான் அவர்களிடம் கோருகிறேன்.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். அரசியல் அதிகாரத்திற்காகவோ, அரசியல் பிரசித்தத்திற்காகவோ நான் தீர்மானங்களை எடுப்பதில்லை. நாட்டிற்காகவும், இளைஞர்களின் எதிர்காலத்துக்காகவுமே நான் தீர்மானங்களை எடுக்கிறேன்.

கடந்த இரண்டு வருடங்கள் நான் அரசியல் செய்யவில்லை. அரசியல் இலாபங்களைப் பெறுவதற்காக தீர்மானங்களை எடுக்கவில்லை.

இந்த பாராளுமன்றத்தில் என்னைப் போன்று நாட்டை நேசிக்கும் பலர் உள்ளனர்.

தமது தனிப்பட்ட தேவைகளை விடவும், நாட்டின் நலன் குறித்து சிந்திக்கும் பலர் உள்ளனர். அவர்கள் அனைவரிடமும் நாட்டை கட்டியெழுப்பும் முயற்சியுடன் இணைந்து கொள்ளுமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Share This Article