படகுச் சேவையை முடக்கி அனலைதீவில் மக்கள் போராட்டம்!

படகுச் சேவையை முடக்கி அனலைதீவில் மக்கள் போராட்டம்!

editor 2

நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட இறங்குதுறையை தற்காலிகமாக புனரமைத்தமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளமைக்கு எதிராக அனலைதீவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

கடலால் சூழப்பட்டுள்ள அனலைதீவிற்கான போக்குவரத்து கடல் வழியிலேயே இடம்பெற்றுவருகின்றது.

ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறைமுகத்திலிருந்து அனலைதீவிற்கு படகுச் சேவை நடைபெறுவது வழக்கம்.

மிக நீண்டகாலமாக அனலைதீவு இறங்குதுறைப் பகுதி சீரமைக்கப்படாமல் காணப்பட்டுவருகின்றது.

இதனிடையே,

அனலைதீவு ஐயனார் ஆலயத்தின் கட்டடங்கள் புனரமைப்பு வேலைகளுக்காக இடிக்கப்பட்டுவருகின்றன.

அந்த இடிபாடுகளை இறங்குதுறையின் கரைப் பகுதிகளில் பரவி தற்காலிகமாக சீரமைக்கும் நடவடிக்கை ஆலய நிர்வாகத்தாலும் கிராமத்து மக்களாலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து,

அங்கு சென்ற கரையோர பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் குறித்த சீரமைக்கப்பட்ட பகுதியை அகற்றி அதிலிருந்து கட்டட இடிபாடுகளை முற்றாக அகற்றுமாறும் இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கால அவகாசம் வழங்கியிருப்பதாக தெரியவருகிறது.

இதனை அடுத்து,

குறித்த பகுதியை முன்னர் இருந்தது போல சீரமைக்கும் நடவடிக்கையை ஆலய நிர்வாகம் முன்னெடுத்திருக்கிறது.

இருந்தபோதிலும்,

அங்கு திரண்ட கிராமத்து மக்கள் குறித்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டாம் என்று மறித்ததுடன், அங்கிருந்து இடம்பெறும் படகுச் சேவைகளையும் இடைநிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This Article