இலங்கையின் அனைத்து பகுதிகளும் எதிர்காலத்தில் மிகப்பெரிய புவிநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் கொண்டுள்ளன என்று யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பதிவு ஒன்றை அவர் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
செவ்வாய்க்கிழமை இரவு 11.02 மணியளவில் நிகழ்ந்த புவி நடுக்கத்தின் அளவு 2. 3 ரிக்டர் என் தேசிய புவிச்சரிதவியல் மற்றும் கனிமவள பிரிவு அறிவித்துள்ளது.
இந்த புவி நடுக்கத்தின் குவிமையம் தாண்டிக்குளத்துக்கும் கூமாங்குளத்திற்கும் இடைப்பட்ட மரிக்காரம்பளையாகும். இந்த குவி மையம் புவிமேற்பரப்பிலிருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிகழ்ந்துள்ளது.
பொதுவாக எதிர்வு கூற முடியாத இயற்கை அனர்த்தங்களில் புவி நடுக்கம் முதன்மையானது. ஆனால், உலகின் பல பிரதேசங்களில் நிகழ்ந்த பெரும் புவிநடுக்க நிகழ்வுகள் இரண்டாகவே நிகழ்ந்துள்ளன. முதலாவது மிக மெதுவானதாக வெறும் நடுக்கத்துடன் கூடியதாகவே அமைந்துள்ளது. இதனை உணர்ந்து கட்டுமானங்களை விட்டு வெளியே வந்து வெளிப்பிரதேசங்களில் நின்றால் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இரண்டாவது புவி நடுக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாக்கலாம்.
அண்மைக்காலத்தில் இலங்கையின் கடற்பிராந்தியங்களிலும் நிலப்பகுதிகளிலும் சிறிய அளவிலான நிலநடுகக்கங்கள் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன.
இவை எதிர்காலத்தில் மிகப் பெரிய அளவிலும் நில நடுக்கங்கள் இடம்பெறலாம் என்பதற்கான சமிக்ஞைகளாகவே கருதலாம்.
அனர்த்தங்கள் தொடர்பான விழிப்புணர்வை சகல பிரஜைகளுக்கும் வழங்க வேண்டும். குறிப்பாக வெள்ளப் பெருக்கு, வறட்சி, புயல், சூறாவளி, நிலச்சரிவு, புவிநடுக்கம் தொடர்பான இயற்கை அனர்த்தங்கள் பற்றியும் வீதி விபத்துகள் மற்றும் தீ விபத்துகள் பற்றியும் இலங்கையின் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இவற்றால் ஏற்படும் உயிர் மற்றும்
உடைமை இழப்புக்களை தவிர்க்க முடியும் – என்றுள்ளது.
இதேவேளை, இந்த புவிநடுக்கத்துக்கும் வவுனியாவில் நடக்கும் கல் அகழ்வு, குழாய் கிணறு தோண்டுதல் போன்ற செயல்பாடுகளுக்கும் தொடர்பு படுத்தி பலரும் வெளியிடும் தகவல்களை அவர் மறுத்துள்ளார். அத்துடன், இவ்வாறான செயல்பாடுகள் வேறு பல பிரச்னைகளை தோற்றுவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.