அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை!

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை!

Editor 1

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார்.

அந்தவகையில் குறித்த நிபுணர் குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி செயலாளரும், சிரேஷ்ட நிர்வாக உத்தியோகத்தருமான உதய செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இக் குழுவில் பணிப்பாளர் நாயகமாக நான்கு உறுப்பினர்களும், மேலதிக உறுப்பினர்களாக நான்கு உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர்.

அத்தோடு, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜீ.எல். வெர்னன் பெரேரா குழுவின் செயலாளராக செயற்படுவார் எனவும் ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

அரச சேவையில் உள்ள பல்வேறு சேவைப் பிரிவுகளுக்கிடையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து கவனம் செலுத்துவதுடன், அரச சேவையின் அனைத்துத் துறைகளிலும் உள்ள சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை மீளாய்வு செய்யவுள்ளது.

இதனையடுத்து, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை இந்த நிபுணர் குழு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இது தொடர்பான தமது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் ஜனாதிபதிக்கு வழங்குமாறும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Share This Article