அரசமைப்பில் காணப்படும் கவனிக்காமல் விடப்பட்ட சிறிய தவறு ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்தையும் பாராளுமன்றத்தின் ஆயுள் காலத்தையும் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கக்கூடிய வாய்ப்பை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இலங்கையின் பிரபல ஆங்கில இணையத்தளமான எக்கணமி நெக்ஸ்ட் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
அது தனது தளத்தில் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு,
2015இல் 19ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்த காலம் முதல் கவனம் செலுத்தப்படாமலிருந்த அரசமைப்பின் ஒரு தவறை பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்தை நீடிக்கக்கூடும்.
19ஆவது திருத்தம் ஜனநாயக சீர்திருத்தங்களை உறுதி செய்யவும் நல்லாட்சியை உறுதி செய்யவும் பாராளுமன்றத்தினதும் ஜனாதிபதியினதும் பதவிக்காலத்தை ஐந்தாக குறைக்கவும் முயன்றது.
எனினும், பதவிக்காலம் தொடர்பான நிலைத்தன்மையை உறுதி செய்வதை அது புறக்கணித்தது.
19ஆவது திருத்தத்துக்கு அமைய பாராளுமன்றம், ஜனாதிபதியின் ஆறு வருட பதவிக்காலம் பற்றிய அனைத்து குறிப்புகளும் ஐந்தாண்டுகளாக மாற்றப்பட்டாலும் உறுப்புரை 83 (டி) கவனிக்கப்படாமலும் மாற்றப்படாமலும் ஜனாதிபதி விக்ரமசிங்கவுக்கு தனது பதவிக்காலத்தை நீடிப்பதற்கான
வாய்ப்பை வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அல்லது பாராளுமன்றத்தின் ஐந்தாண்டு பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான எந்தவொரு சட்டமூலத்துக்கும் மூன்றில் இரண்டு பெரும் பான்மையுடன் பாராளுமன்றத்தில் ஒப்புதல் தேவை.
அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பில் ஒப்புதல் பெற வேண்டும்.
எவ்வாறாயினும், பிரிவு 83(டி) இன் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஐந்து (5) ஆண்டுகளுக்கு அல்லாமல் ஆறு (6) ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கப்பட்டால் மட்டுமே தேவைப்படும்.
இதன் பொருள் விக்கிரமசிங்க அரசமைப்பை மீறாமல் தனது சொந்த மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை 11 மாதங்கள் மற்றும் 29 நாட்களுக்கு நீடிக்க முடியும்.
விக்கிரமசிங்கவுக்கு இன்னும் காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த வருட இறுதியில் ஜனாதிபதித்தேர்தலை நடத்துவதற்கு நாடு தயாராக இல்லை எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டார தெரிவித்த கருத்துகளுடன் இதையும் சேர்த்து வாசிக்க வேண்டும் என்று அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் – என்றுள்ளது.