தமது பிரச்சினைகளுக்கு இதுவரையில் தீர்வு கிடைக்காத காரணத்தினால் நாளையும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து இயந்திர இயக்குநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பதவி உயர்வு வழங்காமை,
புதிய ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகோரி தொடருந்து இயந்திர இயக்குநர்கள் சங்கம் கடந்த 6 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்தப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.
ஐந்து தொடருந்து முனையங்களில் இரண்டு முனையங்களைச் சேர்ந்த 80 தொடருந்து இயந்திர இயக்குநர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த பணிப்புறக்கணிப்பின் காரணமாக இன்றைய தினம் 50ற்கும் மேற்பட்ட தொடருந்து பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் நீண்ட தூர சேவைகள் மற்றும் இரவு நேர அஞ்சல் தொடருந்துகள் இன்றும் வழமை போன்று இயங்கும் என பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.