ரஷ்ய இராணுவத்தில் இணைந்துகொண்ட மற்றுமொரு இலங்கையர் நிர்க்கதிக்குள்ளாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசாங்கத்தின் தலையீடு இன்றி ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு கூலிப்படையாக இலங்கைப் பாதுகாப்புப் படையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கடத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் தொடர்ந்தும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் பொலனறுவை – புலஸ்திகம பகுதியைச் சேர்ந்த நபரொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அவரை
நாட்டுக்கு அழைத்து வருமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய குறித்த நபர் ஓய்வு பெற்று ஏழு ஆண்டுகளின் பின்னர் வறுமை நிமித்தம் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி ரஷ்யாவுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 22ஆம் திகதி குறித்த நபர் தனது வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி
இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் புலஸ்திகம பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.