உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான ஆண்டுகளில் சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான பாகுபாடு – குறிப்பாக, தமிழ் இந்துக்கள், தமிழ் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு எதிராக மதப்பதற்றங்கள் அதிகரித்துள்ளன. வடக்கு, கிழக்கில் உள்ள கோவில்கள் உட்பட்ட வழிபாட்டுத் தலங்களை அபகரிக்கும் முயற்சிகள் இந்தப் பதற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
இவ்வாறு சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த ஆணைக்குழு மெய்நிகர் வழியில் நடத்திய விசாரணையில் இலங்கையில் மத சுதந்திரம் வீழ்ச்சி கண்டு வருகின்றது என்று பலரும் கருத்துரைத்துள்ளனர்.
மெய்நிகர் வழி சந்திப்பில் மனித உரிமை சட்டத்தரணியும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கருத்துரைக்கையில், ‘குருந்தூர்மலை ஆலய விவகாரம் இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையிலான பிரச்னையல்ல, சிங்களம் மற்றும் தமிழர்க ளுக்கு இடையிலான பிரச்னையாகும்.
சிங்களவர்கள் இந்தப் பகுதிக்கு உரிமை கோருவது தமிழ் பௌத்தர்களுக்கு அவர்கள் இடமளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது – என்றார்.
இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்துககான மக்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மதுர இராசரத்தினம் – ‘வடக்கு – கிழக்கின் தமிழ் பேசும் பிரதேசங்களில் அரச அனுசரணையுடன் சிங்கள – பௌத்த மயமாக்கல் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் தையிட்டி, மட்டக்களப்பில் மயிலத்தமடு, முல்லைத்தீவில் நீராவியடி போன்ற பல இடங்களை சுட்டிக்காட்டலாம் – என்றார்.
பெண்கள் செயல் வலையமைப்பின் இணை நிறுவனர் செரீன் அப்துல் சாரூர், ‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் இலக்குகளாக முஸ்லிம்கள் மாறியிருக்கின்றனர்’ எனக் கூறினார்.
இந்தநிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டம் மற்றும் இணைய பாதுகாப்பு உள்ளிட்ட சட்டமூலங்கள் மற்றும் மத சிறுபான்மையினரை விகிதாசாரத்தில் குறிவைக்கும் பல கொள்கைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது என்று சர்வதேச ஆணைக்குழு கூறியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு அன்று பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று ஐந்து வருடங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை எவரும் பொறுப்புக் கூறப்படவில்லை என இலங்கையின் தேசிய கிறிஸ்தவ சுவிசேசக் கூட்டணியின் தலைவர் மைக் கேப்ரியல் ஆணைக்குழுவிடம் தெரிவித்தார்.