யாழ்ப்பாணம் தென்மராட்சி – மிருசுவிலில் 8 தமிழர்கள் கொல்லப்பட்ட வழக்கின் கொலையாளியான இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு பொது மன்னிப்பு அளித்தது தொடர்பில் நீதிமன்றில் தனது தரப்பு உண்மைகளை தெரிவிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உயர்நீதி மன்றம் நேற்று உத்தர விட்டுள்ளது.
மாற்றுக் கொள்கை மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று இரு நீதியரசர்கள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட
போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மனு அழைக்கப்பட்ட நேரத்தில், மனுதாரர் தரப்பில் வாதாடிய ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – ஜனாதிபதியின் மன்னிப்பின் பின்னர் விடுவிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்புமாறு நீதிமன்றை கோரினார்.
இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் குழாம், சம்பந்தப்பட்ட
குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கியது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டது.
அத்துடன், மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்
கும் அழைப்பாணை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து, உண்மைகளை உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட மனுவை செப்ரெம்பர் 4ஆம் திகதிக்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் – தென்மராட்சி – மிருசுவிலில் கடந்த 2000ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி 5 வயது சிறுவன் உட்பட 8 பேர் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.
இவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் இராணுவ சார்ஜன்டான சுனில் ரத்நாயக்காவுக்கு கடந்த 2017 மே 20 அன்று மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து சுனில் ரத்நாயக்கா உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்தார்.
மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்து தண்டனையை உறுதி செய்தது. இதன்பின்னர், சுனில் ரத்நாயக்கவை கடந்த 2020 மார்ச் 26ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பில் விடுதலை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.