பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் தலைவிதி மற்றும் இருப்பிடம் ஆகியவற்றைத் தீர்மானிக்கவும் வெளிப்படுத்தவும் இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன், இவற்றுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்வேண்டும் என்று ஐ. நா. மனித உரிமைகள் பணிமனை வலியுறுத்தியுள்ளது.
இன்றைய தினம் தமிழின அழிப்பின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
15 ஆவது ஆண்டாக நினைவுகூரப்படுகின்றது. இந்த நிலையில், ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் நேற்று வெளியிட்ட அறிக்கை யிலேயே
இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் படைத் தரப்பினர் மற்றும் இராணுவத் துணைக் குழுக்களின் ஈடுபாட்டை ஒப்புக்கொள்ளவும் – பகிரங்க மன்னிப்புக் கேட்கவும் அரசாங்கத்தை அவர் கேட்டுள்ளார். மேலும், காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களையும் ஒருபோதும் மறக்க முடியாது என்பதை இந்த அறிக்கை நினைவூட்டுவதாக ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அவர்களுடைய குடும்பங்களும் அவர்களை பற்றி அக்கறை கொண்டவர்களும் நீண்டகாலமாகக் காத்திருக்கிறார்கள். உண்மையை அறிய அவர்களுக்கு உரிமை உண்டு. பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் அரசாங்கம் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளது.
அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையை
அங்கீகரித்தமை – காணாமல் போனோருக்கான பணிமனை மற்றும் இழப்பீட்டு பணிமனையை நிறுவியமை போன்ற சாதகமாக தோன்றும் நடவடிக்கைகளை பதவியேற்ற அரசாங்கங்கள் செய்த போதிலும் தனிப்பட்ட வழக்குகளை விரிவான முறையில் தீர்ப்பதில் குறிப்பிடும்படியான உறுதியான முன்னேற்றம் குறைவாகவே உள்ளது.
1970கள் மற்றும் 2009ஆம் ஆண்டுக்கு இடையில், பரவலான பலவந்தமான காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களை இலங்கை படைகளும் அதனுடன் இணைந்த துணை இராணுவக் குழுக்களும் செய்தன. தமிழீழ விடுதலைப்புலிகளும் கடத்தல்களில் ஈடுபட்டுள்ளனர்.
தனி நபர்கள் மற்றும் குழுவினருடனான நேர்காணல்களின் அடிப்படையில், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், குறிப்பாக பெண்களின்மீது, நீடித்த உளவியல், சமூக மற்றும் பொருளாதார தாக்கங்கள் குறித்து அந்த அறிக்கை விபரிக்கிறது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆண்களாவர்.
பெண்களே அந்தக் குடும்பத்தின் ஒரேவருமானமீட்டும் நபராகினர். இதனால்,
அவர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் சுரண்டல் போன்ற அபாயங்களுக்கு உள்ளாகின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதில் முன்னிலையில் நிற்கும் பெண்கள் இராணுவம், பொலிஸாரால் துன்புறுத்தல் – மிரட்டல் மற்றும்கண்காணிப்பு – சித்திரவதைகளுக்கு உள்ளாகின்றனர். மேலும், சர்வதேச சட்டத்தின் கீழ், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தலைவிதி மற்றும் இருப்பிடம் தெளிவுபடுத்தப்படும் வரை, பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்குகளைத் தீர்ப்பது அரசின் தெளிவான கடமையாகும்.
அரசால் அடுத்தடுத்து விசாரணை ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. இருப்பினும், அவர்களின் சில அறிக்கைகள் மட்டுமே பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன, வெளியிடப்பட்டாலும் அவை மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
பெரும்பாலான பரிந்துரைகள் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பானவை செயல்படுத்தப்படவில்லை. தற்போதைய மற்றும் முன்னாள் மூத்த அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகள் உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகள் தொடர்ந்து நீதியின் பிடியிலிருந்து தப்பித்து வருகின்றனர். ஆயுத மோதல்கள் முடிவடைந்து ஏறக்குறைய 15 வருடங்கள் கடந்தபோதிலும் இன்றுவரை இலங்கை அதிகாரிகள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் தவறி வருகின்றனர். பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்பட வேண்டும்.
நல்லிணக்கம் வெற்றியளிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தவல்ல நிறுவன சீர்திருத்தங்களை நாம் காணவேண்டும் என்றும் ஆணையாளர் அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.