கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1,220 கொத்தணி பாடசாலைகள் உருவாக்கப்படும். இவற்றைக் கண்காணிக்க 350 பாடசாலை குழுக்கள் உருவாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து அதற்குரிய சுற்றுநிருபம் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடகமையத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
டிசெம்பரில் நடக்க வேண்டியிருந்த சாதாரண தரப்பரீட்சை நிறைவுக்கு
வருகிறது. இதன் பின்னர் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு உயர்தர வகுப்புகளும் ஆரம்பமாகும். இந்த மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் உயர்தர வகுப்புகளில் இணைய வாய்ப்பு கிடைக்கும்.
அதற்கு தேவையான அமைச்சரவை அனுமதி ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றுநிருபம் 15ஆம் திகதி வெளியிடப்படும். பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மே 20ஆம் திகதி பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
மேலும், கல்வி நிர்வாக மறுசீரமைப்பு செயல்பாடுகளில் ஆரம்ப கட்டத்தை எட்டியுள்ளோம். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அதன் சுற்றுநிருபம் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும். இதற்கமைய நாடளாவிய ரீதியில் 1,220 கொத்தணி பாடசாலைகள் உருவாக்கப்படவுள்ளன.
இவற்றை மேற்பார்வையிடுவதற்காக 350 பாடசாலை சபைகள் உருவாக்கப்படும்.
தற்போதுள்ள 100 கல்வி வலயங்களும் படிப்படியாக அதிகரிக்கப்படும். பாடசாலைகள் குழுக்களின் அடிப்படையில், 01 – 11ஆம் தரம் வரையிலான வகுப்புகளைக்கொண்ட பாடசாலைகளுக்கு மாணவர்களை உயர்தரத்துக்கு உள்வாங்கும் அதிகாரம் அதிகாரிகளுக்கு உள்ளது.
மேலும், இரசாயனவியல், பௌதிகவியல், உயிரியல், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழிப் பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முக பரீட்சை நடத்தப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வில் பங்கேற்ற 7 ஆயிரம் பேரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாடப் பொருத்தத்தின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பயிற்சி முடிந்த பின்னர் ஜூன் முதலாம் திகதிக்குள் பாடசாலைகளில் இணைக்கப்படுவர். விஞ்ஞான தொழில் நுட்ப பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை ஓரளவுக்கு தீர்க்கப்படும். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இடை நிறுத்தப்பட்ட மாகாண ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான பிரச்னைகளும் தற்போது தீர்க்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், அதிபர்களுக்கான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கிறது.
அதிபர்களின் தொழிற்சங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் அதிபர்களுக்கான கொடுப்பனவுகள், தரம் உயர்த்துதல் மற்றும் ஏனைய சில நடைமுறை விடயங்கள் உள்ளடங்கியுள்ளன – என்றும் கூறினார்.