வெப்ப உயர்வால் உப்புகளின் அளவு இரத்தத்தில் குறையும்போது தசைபிடிப்பு ஏற்படும் – இவ்வாறு யாழ்.போதனா மருத்துவமனை பொது மருத்துவ நிபுணர்களான த. பேரானந்தராஜா, நளாயினி ஜெகதீசன் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு,
நிலவும் வெப்ப காலநிலையில் அதிக வியர்வையால் உடலில் நீரின் அளவு
குறையும். இதனால் மயக்கம், தலைச் சுற்று ஏற்படும். உடல் வெப்பநிலை 40.
5 சென்றி கிறேற்றுக்கு அதிகமாகவும் 105 பரனைற்றுக்கு அதிகமாகும்போது மூளையின் செயல்பாடு பாதிக்கும்.
மேலும், சிறுநீரகம், ஈரல், இருதயத்தில் பாதிப்பு ஏற்படலாம். இதயத்துடிப்பு வீதத்தில் மாற்றம் ஏற்படலாம்.
சுவாச செயல்பாட்டில் மாற்றம், இரத்தப் பெருக்கு உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படலாம்.
வெப்ப சூழலில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். குளிரான இடங்களில் இருக்க வேண்டும். வெப்ப நிலையை போக்கும் வழிமுறையை செய்ய வேண்டும். தண்ணீர் மற்றும் பழச்சாறுகளை அருந்துவதால் உடல்
வெப்ப நிலையைக் குறைக்கலாம்.
முதியவர்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தைகளுக்கு
வெப்ப நிலையால் அதிகளவு பாதிப்புகள் ஏற்படும். எனவே, கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, பாடசாலை மாணவர்கள் வெயிலில் விளையாடுவதைத் தவிர்க்கவும். நீர் அருந்த வேண்டும். குளிரான நீரில் குளிக்க வேண்டும். வெப்ப நிலை அடுத்த வருடம் குறையப்போவதில்லை.
இன்னும் கூடப் போகிறது. அதனால், நாம் மரங்களை நடுகை செய்து காற்றை, சூழலை குளிர்மையாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
குடிக்கக்கூடிய அளவு கூலான தண்ணீர் பாவிப்பதால் பெரிய விளைவுகள் வராது. குடிக்கும் திரவ ஆகாரங்கள் நல்லதா? என பார்க்க வேண்டும். பொலித்தீன் பாவனையைக் குறைக்க வேண்டும். பிளாஸ்ரிக் பாவனையைத் தவிர்க்க வேண்டும். வீட்டுக்கு வீடு மரங்களை நட வேண்டும். வயோதிபர்களுக்கு போதிய திரவ ஆகாரங்கள், பழங்களை கொடுக்க வேண்டும். இருதய வருத்தம் உள்ளோருக்கு வெப்ப அதிகரிப்பு கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.