இலங்கையின் ஆளுங்கூட்டணியினை மீண்டும் வெல்ல வைக்க விரும்பும் இந்தியாவின் ஆளுங்கட்சி!

இலங்கையின் ஆளுங்கூட்டணியினை மீண்டும் வெல்ல வைக்க விரும்பும் இந்தியாவின் ஆளுங்கட்சி!

Editor 1

இந்தியத் தேர்தலில் தனது பிரசார உத்திகள் மற்றும் அனுபவங்கள் – அறிவை ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சியுடன் பகிர்ந்துள்ளது

பாரதிய ஜனதா கட்சி (பா. ஜ. க.). இதன் மூலம் இலங்கையில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் இந்தக் கட்சிகளை கொண்ட கூட்டணி வெற்றிபெறவேண்டும் என்தே இந்தியாவை ஆளும் கட்சியின்
விருப்பம் என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

துடில்லியில் நேற்று முன்தினம் பா.ஜ. கவின் வெளிவிவகார பிரிவின் பொறுப்பாளர் விஜய் சௌதைவேலின் அழைப்பில் 10 நாடுகளை சேர்ந்த 18 முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்தனர். இதில், பங்கேற்ற கட்சிகள் அனைத்தும் இந்தியாவின் மூலோபாய நட்புறவில் நெருக்கமான கட்சிகளாகும்.

இதில், இலங்கை சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் பங்கேற்றன. தற்போது, இந்த இரு கட்சிகளுமே பரஸ்பர ஒத்துழைப்புடன் நாட்டை ஆட்சி செய்து வருகின்றன.

இந்த நிலையில், வரும் ஜனாதிபதித் தேர்தலில் இந்த இரு கட்சிகளுமே கூட்டணியாக தேர்தலை சந்திக்கவுள்ளன என்று கருதப்படுகின்றது.

இந்த நிலையில், இந்தியாவை ஆளும் பா. ஜ. கட்சி தனது பிரசார உத்திகள் மற்றும் அனுபவங்கள் – அறிவை இந்தக் கட்சிகளுக்கு பகிர்ந்துள்ளது. இதன் மூலம் இந்த இரு கட்சிகளும் வெற்றி பெறுவதை இந்தியா ஆசீர்வதிக்கிறது என்ற மறைமுக செய்தியை விடுத்துள்ளதா? என்ற கேள்வியை அரசியல் அவதானிகள் மத்தியில் எழுப்பியுள்ளது.

அண்மையில், இந்தியா ஜே. வி. பி. கட்சியினரை அழைத்த போதிலும் அந்தக் கட்சிக்கோ அல்லது வேறு எந்தக் கட்சிக்குமோ அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற விடயத்தையும் இலங்கை அரசியல் தரப்புகள் சுட்டிக்காட்டின.

மேலும், இந்தியாவுக்கு சென்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஸ்னவ் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Article