தமிழர் உரிமைகளுக்கான போராட்டம் தொடரும். ஆனால், வன்முறை யற்ற வழிகளில்…’ – இவ்வாறு அண்மையில் வடக்குக்கு வந்து சென்ற ஜனாதிபதியின் ஆலோசகரும் நோர்வே முன்னாள் தூதுவருமான எரிக் சொல் ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை அரசு அதிகாரங்களைப் பகிரவேண்டும் என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் வெளியிட்ட பதிவின் முக்கிய அம்சங்கள் வருமாறு,
தற்போது வடக்கு இலங்கை சமாதானத்தை அனுபவிப்பதுடன், அது மிகச்சிறந்த விடயமாகும். பாதுகாப்பு சிறந்த நிலையில் உள்ளது.
யுத்தம் நடந்த காலத்துக்குத் திரும்பிச்செல்வதை எவரும் விரும்பவில்லை. இருப்பினும், தமிழர்களின் பல அபிலாசைகள் இன்னமும் பூர்த்திசெய்யப்படவேண்டிய நிலையிலேயே உள்ளன.
குறிப்பாக யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக் குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காத்திருக்கின்றன.
கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் இன்னமும் முழுமையாக அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வில்லை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மத வழிபாட்டுத்தலங்கள் மற்றும் ஆலயங்களை அடிப்படையாகக் கொண்டு நிலவும் குழப்பங்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படவேண்டும்.
வடக்கு இலங்கையில் வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுபீட்சம் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும். இலங்கை அரசு அதிகாரங்களைப் பகிர வேண்டும். தமிழர் உரிமைகளுக்கான போராட்டம் தொடரும். இருப்பினும் அது வன்முறையற்ற விதத்தில் தொடரும் – என்றுள்ளது.