சுதந்திரக்கட்சியின் தலைவராக ரணில் செயற்படுவார் என்கிறது ஐ.ம.சக்தி!

சுதந்திரக்கட்சியின் தலைவராக ரணில் செயற்படுவார் என்கிறது ஐ.ம.சக்தி!

Editor 1

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுவார். அதனை அடிப்படையாகக் கொண்டே அமைச்சுப்பதவிகளை வகிக்கும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தற்போது செயற்பட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராகவுள்ளார். சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை ஏற்றுக் கொண்டுள்ள சுதந்திர கட்சியின் அமைச்சர்களே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்திலிருந்து ஒவ்வொரு அரசாங்கத்திலும் அமைச்சுப்பதவிகளை வகித்தவர்களாவர்.

எமது நல்லாட்சி அரசாங்கத்திலும் அவர்கள் அமைச்சுப்பதவிகளை வகித்துள்ளனர். இவர்கள் அண்மையில் அரசியல் குழு கூட்டத்தை நடத்தி புதிய நியமனங்களையும் வழங்கியுள்ளனர். இறுதியில் தற்போதைய ஜனாதிபதி சுதந்திர கட்சியின் தலைவரானதன் பின்னரே இந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் என்றார்.

Share This Article