தமிழரசுக்கட்சியின் நிர்வாகத் தெரிவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

தமிழரசுக்கட்சியின் நிர்வாகத் தெரிவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

editor 2

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிர்வாக தெரிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. தமிழ் அரசு கட்சியின் மனு மீதான ஆட்சேபனைகளுக்காகவே வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிர்வாக தெரிவு, தலைவர் தெரிவுக்கு எதிராக,திருகோணமலை மாவட்ட நீதிமன்றத் தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை உடனடியாக முடிவுக்கு கொண்டுவருவதற்காக வழக்கின் பிரதிவாதிகளாக மாவை சேனாதிராசா, சி. சிறிதரன், ப.சத்தியலிங்கம், ச. குகதாசன், சே. குலநாயகம், சீ. யோகேஸ்வரன் ஆகிய 6 பிரதி வாதிகளும், யாப்பு மீறப்பட்டுள்ளதை ஏற்று மனுதாரர் கோரிய நிவாரணத்தை
வழங்குவதாக ஒத்துக்கொண்டனர்.

இந்நிலையில், பிரதிவாதிகளில் ஒருவரான எம். ஏ. சுமந்திரனின் கருத்தை அறிவதற்காக நேற்றைய தினம் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தது.

இதன்போது, சுமந்திரன் ஆட்சேபனை சமர்ப்பித்தார். அவர், 20 பேரை இணைத்தது மட்டுமே சட்ட ரீதியற்ற நடவடிக்கை, யாப்பின்படியே தேர்தல் நடந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் சி. இரட்ணவடிவேல் இடை புகு மனுதாரராக வழக்கில் நுழைந்தார்.

இதற்கு சி. சிறீதரன், ச. குகதாசன் ஆகியோருக்காக முன்னிலையான சட்டத்தரணி கே. வி. தவராசா கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார்.

இதையடுத்து, இடைபுகு மனுதாரரை இணைப்பதற்கு எதிராகவும், மூலவழக்குக்கு எதிராகவும் ஏனைய 6 பேரும் ஆட்சேபனை தெரிவிப்பதற்காக எதிர்வரும் 24ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Share This Article