கிளிநொச்சியில் குடும்பஸ்தர் வீதியில் வைத்து வெட்டிக்கொலை!

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் வீதியில் வைத்து வெட்டிக்கொலை!

editor 2

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில், நடு வீதியில் வைத்து, குடும்பஸ்தர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

பிரமந்தனாறு பகுதி பாடசாலையில், நேற்று பிற்பகல் விளையாட்டு போட்டி நடைபெற ஏற்பாடாகி இருந்த நிலையில், பாடசாலையில் வைத்து, இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை ஒன்றின் விளைவாக, இரண்டு தரப்புகளுக்கு இடையில், பாடசாலை வளாகத்தில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

அதனையடுத்து, பாடசாலை நிர்வாகம், இரு தரப்புகளையும் சமரசம் செய்து பாடசாலை வளாகத்தை விட்டு வெளியே அனுப்பியது.

அதன் பின்னர், மீளவும் குறித்த இரண்டு தரப்பினரும், புன்னைநீராவி பிள்ளையார் ஆலய சந்தி பகுதியில் மீளவும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் பிரதேச மக்களால், ஏற்கனவே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற தருமபுரம் பொலிஸார் இருவரை கைது செய்து பின்னர் அவர்களை மீளவும் இறக்கிவிட்டு, சிறிது தூரம் சென்ற பின்னர் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்கான நபர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பபட்டபோது வழியிலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிக்கு தருமபுரம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸாரை அழைத்திருந்தபோதும் பாடசாலைக்கு பொலிஸார் சமுகம்
அளித்திருக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில், 32 வயதான சவரிமுத்து ஜோன் பற்றிக் என்பவரே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் ஒருவரை தருமபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Share This Article