அமெரிக்க பாலத்தை உடைத்த கப்பல் இலங்கை வர அனுமதி பெறவில்லை!

அமெரிக்க பாலத்தை உடைத்த கப்பல் இலங்கை வர அனுமதி பெறவில்லை!

editor 2

அபாயகரமான பொருட்கள் அடங்கிய சிங்கப்பூர் சரக்கு கப்பல் நாட்டுக்குள் வருவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதி பெறவில்லை. இதுதொடர்பாக முறையான விசாரணை நடத்தி பாராளுமன்றத்துக்கு அறிவிப்போம் என சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) விசேட கூற்றொன்றை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஷரித்த ஹேரத் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்துகொண்டிருக்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ள சிங்கப்பூர் சரக்கு கப்பல் தொடர்பாக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கைக்கு வருகை தந்துகொண்டிருக்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ள சிங்கப்பூர் சரக்கு கப்பலில்  பாரியளவிலான வெடிபொருட்கள் மற்றும் அபாயகரமான பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுவது உண்மை. இந்த விடயங்கள் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை விசாரணை நடத்தி வருகிறது.

அதேபோன்று குறித்த கப்பல் இலங்கைக்குள் வருவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் அனுமதி பெறவில்லை. அதனால் இதுதொடர்பாக விசாரணை ஒன்றை ஆரம்பிக்குமாறு துறைமுகத்துக்கும் சுங்கத்துக்கும் அறிவித்திருக்கிறோம். இந்த கப்பல் அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தில் விபத்துக்குள்ளானதால்தான் இந்த கப்பலில் இருந்த அபாயகர பொருட்கள் தொடர்பில்  தெரிந்துகொள்ள முடியுமாகி இருந்தது.

அதனால் இதுதொடர்பக முறையாக விசாரணை நடத்தி, அது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

Share This Article