திருக்கோவில் ஆதார வைத்தியாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

திருக்கோவில் ஆதார வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

editor 2

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு மேலும் பல வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இன்று சாய்ந்தமருது காரைதீவு ஒலுவில் அட்டப்பளம் நிந்தவூர் உள்ளிட்ட வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்களே இவ்வாறு ஆதரவு தெரிவித்து பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பொது வைத்தியசாலைக்கு சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அங்கு பணியாற்றிய வைத்தியர்கள் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி பணிப்பகிஸ்கரிப்பினை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 11 ஆம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய மாணவன் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் அசமந்த போக்கு காரணமாகவே குறித்த மாணவன் உயிரிழந்ததாகக்கூறி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வைத்தியசாலை கட்டிடத்திற்கு சேதம் விளைவித்தவர்களை கைது செய்யுமாறு கோரி கடந்த 10 நாட்களுக்கு மேல் பணிபுறக்கணிப்பில் வைத்தியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் சம்பத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share This Article