வட மாகாணத்தில் விவசாயிகளின் மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய நடவடிக்கைகளில் வடக்குமாகாண மக்களின் அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அமைச்சுக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணத்தின் பெரும்பகுதியை வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்குமாகாணத்தில் 30 வருடங்களாக இடம்பெற்ற உள்யுத்தத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் விவசாயத்தை கைவிடவில்லை எனவும் விவசாய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார் இந்த நிலையிலேயே வடக்குமாகாண விவசாயிகள் நடவடிக்கைகளுக்கு மின்சாரபயன்பாட்டில் தமக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கமைவாக விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் மின்சாரக் கட்டணங்களுக்குநிவாரணம் வழங்கும் வகையிலேயே அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.