யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை – பொன்னாலை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவு முன்னெடுத்த சோதனையின் போது, சந்தேகநபர் கீரிமலைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவர், யாழ்ப்பாணம் சித்தங்கேணியை பகுதியைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது, இரண்டு உந்துருளிகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் ஏற்கனவே, ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 4 பேர், எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 11ஆம் திகதி காரைநகருக்கு சென்று, வட்டுக்கோட்டை பகுதிக்கு திரும்பும் போது, மகிழுந்தில் பயணித்த சிலரால் குறித்த இளைஞர் மற்றும் அவரது மனைவி கடத்தப்பட்டிருந்ததுடன், குறித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதலும் நடத்தப்பட்டிருந்தது.
இதன்போது, காயமடைந்த குறித்த இளைஞன், வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தநிலையில் பொன்னாலை கடற்படை முகாமிற்கு முன்பாக இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சிசிரிவி காணொளி காட்சி அண்மையில் வெளியாகியிருந்தது.
குறித்த சம்பவம் இடம்பெற்ற போது, பொன்னாலை கடற்படை முகாமின் சில கடற்படை உத்தியோகத்தர்களும் இருந்த நிலையில், அதனை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையினையும் எடுத்திருக்கவில்லை என்பது, அந்த காணொளியின் ஊடாக உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் கடற்படையும் உள்ளக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.