இலங்கை தமிழ் அரசுக் கட்சி கிளைகள் புலம்பெயர் தேசத்தில் உருவாக்க அனுமதி வழங்கப்படவில்லை என்று தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,
மேலும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக செயல்பட்டு வருகின்றன.
இதேவேளை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமை பெற்றவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் புலம்பெயர் நாடுகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் செயல்பாடுகளுக்கு ஆதரவாகத் தனியாகவும் தம்மை நிறுவனமயப்படுத்தியும் அந்த நாட்டு சட்ட
வரம்புகளை கடைப்பிடித்து செயல்பட்டு வருகிறார்கள்.
அவர்களின் தாயக மக்கள்மீதான அக்கறையை எமது கட்சி என்றும் மதித்து செயல்பட்டு வந்துள்ளது.
அவர்கள் மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் – இயற்கை பேரிடரின் போதும் – பெருந்தொற்றுக்கு எமது மக்கள் முகங்கொடுத்தபோதும் மற்றும் கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாடு போன்ற செயல்திட்டங்களிலும் நேரடியாகவும் எமது கட்சி உறுப்பினர்களூடாகவும் பல வருடங்களாக செயல்பட்டு வருகிறார்கள். அதற்கு எமது மக்கள் சார்பாக நன்றியுடைய வர்களாக உள்ளோம். எமது கட்சியின் கொள்கைகளை ஏற்று இணைந்து
செயல்பட விரும்பும் புலம்பெயர் உறவுகளுடன் செயல்பட கட்சி ஆயத்தமாக உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் ஐக்கிய இராச்சியத்தில் லண்டன் நகரில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளை அமைக்கப்பட்டதாக சில பத்திரிகை மற்றும் இணையத்தளங்களிலும் வேறு சிலவற்றில் ‘இலங்கை தமிழ் அரசு கட்சி போரம்’ (ITAK FORUM) அமைக்கப்பட்டதாகவும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டமையை அவதானிக்க முடிந்தது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் கட்சியின் மத்திய செயல் குழுவுக்கே உண்டு. இலங்கைக்கு வெளியே எமது கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான எந்த அனுமதியும் இதுவரை இலங்கை தமிழ் அரசுக் கட்சி
யால் வழங்கப்படவில்லை – என்றுள்ளது.