ஜனாதிபதி ரணில் – மஹிந்த தரப்பு சந்திப்பு தோல்வியில் முடிந்தது!

ஜனாதிபதி ரணில் - மஹிந்த தரப்பு சந்திப்பு தோல்வியில் முடிந்தது!

editor 2

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொதுஜன பெரமுனவின் தலைவர்களான மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு தோல்வியில் முடிவடைந்துள்ளதாக ஆளுங்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

இந்தச் சந்திப்பில் அடுத்த தேர்தலுக்கான கூட்டணித் தொடர்பில் கலந்துரையாடல்கள இடம்பெற்றுள்ளதுடன், பேச்சுகளில் இணக்கப்பாடுகள் எட்டப்படாமையால் சந்திப்பு தோல்வியில் முடிந்துள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் இவ்வருடத்தின் இறுதி காலாண்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும்.

ஆனால், அரசாங்கத்தால் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த முடியும்.

ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெற்றால் ஆளுங்கட்சியால் வெற்றி பெற முடியாதென பல கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருவதுடன், ஆளுங்கட்சி மீதான மக்களின் அதிருப்தியும் இன்னமும் குறையவில்லை.

இதனால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசனைகளை நடத்தி வருகிறது.

பொதுத் தேர்தலின் எந்தவொரு கட்சியும் இம்முறை பெரும்பான்மையை பெற முடியாதென்றும் தொங்கு பாராளுமன்றமொன்றே உருவாகும் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

”புத்தாண்டின் பின்னர் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும்’ என ராஜபக்சர்களின் நெருங்கிய சகாவான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்சவின் வருகையுடன் வெளியாகியுள்ள உதயங்கவின் அறிவிப்பை வெறுமனே ஒரு அறிவிப்பாக எடுத்துக்கொள்ள முடியாது.

தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்க சஜித் தரப்போ அல்லது பசில், ரணில் தரப்போ விரும்பாது.

இதனால் கூட்டணி அரசாங்க மொன்றை மொட்டுக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து உருவாக்கும் சூழலே உருவாகுமென அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

பசில் ராஜபக்சவும் ஜனாதிபதி நினைத்தால் பொதுத் தேர்தலை நடத்த முடியும் என சூட்சமமான கருத்தொன்றை முன்வைத்திருந்தார். இதனால் வரும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் பற்றிய பேச்சுகள் கொழும்பு அரசியலில் சூடுபிடிக்கும்.

இந்த நிலையில், ரணில், மஹிந்த, பசில் சந்திப்பில் அடுத்த தேர்தலுக்கான கூட்டணி தொடர்பில் ஆழமாக ஆராயப்பட்டுள்ளது. என்றாலும், ராஜபக்சர்களின் கோரிக்கைகளை ரணில் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிய வருகிறது.

இதனால் இணக்கப்பாடு இன்றி சந்திப்பு நிறைவடைந்துள்ளதுடன், புத்தாண்டுக்கு முன்னர் மீண்டும் கூடி பேச்சுகளை நடத்தி கூட்டணி அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளை
இறுதிப்படுத்த மூவரும் முயற்சிக்கலாம் எனவும் அறிய முடிகிறது.

Share This Article