இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கினால் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து விடுதலை செய்யப்பட்ட முருகன் என்ற ஸ்ரீஹரனுக்கு லண்டன் செல்வதற்கு விசாவும், இலங்கை செல்வதற்கு கடவுச்சீட்டும் வழங்க வேண்டும் என உத்தரவிடக் கோரி சென்னை மேல் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முருகனின் மனைவி நளினி குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
2022ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருடன் விடுதலையான தமது கணவரான முருகன் தற்போது வரை சிறப்பு முகாமிலேயே உள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் பணி புரிந்து வரும் தமது மகள் மெஹ்ராவை கடந்த 16 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை எனவும் இருவரும் லண்டனுக்கு சென்று அவருடன் வசிக்க விரும்புவதாகவும் நளினி அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
எனவே, தமது கணவர் முருகன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்குச் சென்று நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என நளினி கோரியுள்ளார்.