பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுவது அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடே தவிர கட்சியின் நிலைப்பாடல்ல, பொதுஜன பெரமுன தலைமையிலான பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஊடாகவே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டி நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவி வகிப்பவர்கள் மாத்திரம் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.
கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் மாற்று யோசனைகளை முன்வைத்துள்ளார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க வேண்டும் என்று குறிப்பிடுவது கட்சியின் நிலைப்பாடல்ல இது ஒரு தரப்பினரது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதும் எமது வேட்பாளரை அறிவிப்போம்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் ஸ்தாபிக்கப்படும் பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஊடாகவே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார். சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து பலமான அரசியல் கூட்டணியை ஸ்தாபிப்போம்.
நிகழ்நிலை காப்புச் சட்டம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. இந்த சட்டத்தில் ஏதேனும் குறைப்பாடுகள் அல்லது சிக்கல்கள் காணப்படுமாயின் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி சபாநாயகர் சிறந்த தீர்மானத்தை எடுக்கலாம் என்றார்.