(2ஆம் இணைப்பு) சாந்தன் காலமானார்; மருத்துவமனை அறிவிப்பு!

சாந்தன் காலமானார்; மருத்துவமனை அறிவிப்பு!

editor 2

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சாந்தன் காலை 7.50 மணிக்கு காலமானார் என்று ராஜீவ் காந்தி மருத்துவமனை அறிவிப்பு விடுத்துள்ளது.

கடும் நோய்ப்பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்த சாந்தன் அண்மைய நாட்களாக மிகுந்த சோர்வுடன் காணப்பட்டதாகவும் மாரடைப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் மருத்துவமனை அறிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த சாந்தன், இன்று காலையில் காலமானார். 

முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், வேலை தேடுவதற்காக இந்தியாவுக்குச் சென்றிருந்த வேளையில், அவர் ராஜீவ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

முதலில் சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி தடா தனிச் சிறையிலும் பின்னர் வேலூர் மையச் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், சிறைப்பட்டிருந்த காலத்தில் தெய்வீகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு காணப்பட்டிருந்தார்.

சக சிறைவாசிகளுடன்கூட அதிகமாகப் பேசிக்கொள்ளாத அவர், பார்வையாளர்களைச் சந்திப்பதில் ஆர்வம் காட்டாமலேயே இருந்துவந்தார்.

சாந்தன் உட்பட ஆறு பேரையும் விடுதலைசெய்து இந்திய உச்சநீதிமன்றம் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி உத்தரவிட்டது.

அதையடுத்து, இந்தியர்களான நளினி, அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன் இருவரும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

சாந்தன், முருகன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும் இலங்கையர் என்பதால், அயல்நாட்டவர்க்கான திருச்சி சிறப்பு முகாமில் மறுநாள் அடைத்துவைக்கப்பட்டனர்.

சிறப்பு முகாமில் நால்வருக்கும் பல உபாதைகள் ஏற்பட்டபோதும், இந்திய மத்திய அரசும் தமிழக மாநில அரசும் அவர்களை விடுவிக்க காலம் தாழ்த்திவந்தன. 

இந்நிலையில், சாந்தனுக்கு கடுமையான உடல்நலிவு உண்டான நிலையில், கல்லீரல் அழற்சிக்கான தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த மாதம் 27ஆம் தேதி சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், நேற்று இரவு அவரின் உடல்நிலை கவலைக்கிடமானது.

இந்தத் தகவல் இன்று அதிகாலையில் சாந்தன் உயிரிழந்துவிட்டதாக சில தொலைக்காட்சிகளில் செய்தி வெளியானபோதும், மருத்துவமனையின் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் இயக்கத்தினரும் சமூக ஊடகங்களில் தங்களின் கொந்தளிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து, குழப்பமான நிலைமையில், காலை 8 மணியளவில் சாந்தன் காலமானார் என்று அறிவிக்கப்பட்டது.

இன்று காலை 7.50 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனையின் தலைமை அதிகாரி தேரணி ராஜன் ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.

Share This Article