யாழ்ப்பாணத்தில் முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்று புதன்கிழமை
முதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது – வட இலங்கை
தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சி. சிவபரன், யாழ். மாவட்ட தூர இட
சேவைகளுக்கான பேருந்து உரிமையாளர்களின் தலைவர் வி. சஜிந்தன் ஆகியோர் தெரிவித்தனர்.
இவர்கள் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தனர்.
மேலும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பை ஏற்று யாழ்.மாவட்ட
தூர சேவை சங்கத்தின் பேருந்து உரிமையாளர்களும் ஏனைய மாவட்ட சங்கப் பிரதிநிதிகளும் இன்று (நேற்று) 8 மணிக்கு மின்சார நிலைய வீதித் தரிப்பிடத்துக்கு சென்றோம்.
அங்கு, அமைச்சர் எமது தரிப்பிடம் யாழ். போதனா மருத்துவமனையின் சேவைகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனால் சேவையில் ஈடுபடுவதற்காக நிற்கும் பேருந்துகளை அந்த இடத்தில் தரித்து நிற்க வேண்டாம் என பொலிஸாரின் முன்னிலையில் கூறி அவ்விடத்திற்கு ‘வாகனங்களை நிறுத்த வேண்டாம்’ (No Parking) என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
ஏற்கனவே இலங்கை போக்குவரத்துச் சபையின் ஒத்துழைப்பின்மையால், குறுகிய அதாவது ஒரே நேரத்தில் 4 பேருந்துகளை மட்டும் தரித்து நிற்கக்கூடிய மின்சார நிலைய வீதித் தரிப்பிடத்திலேயே சேவையில் ஈடுபடுகிறோம்.
தற்போது அமைச்சரின் அறிவுறுத்தலால் 2 பேருந்துகள் மட்டும் தரித்து நிற்கக்கூடிய தரிப்பிடத்திலிருந்து சேவையாற்றுகிறோம்.
இதனால் அந்த இடத்தில் இருந்து தூர இடங்களுக்கான சேவைகளை ஆற்ற முடியாதுள்ளது.
வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணம் வரும் பேருந்துகள் தரித்து நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இக்கட்டான இந்நிலையிலும் வட மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை எம்மிடம் இருந்து பணத்தை அறவிடுவதில் மட்டும் விழிப்பாக இருக்கின்றது.
நாம் மின்சார நிலைய வீதியில் குறுகிய தரிப்பிடத்தில் இருந்து மிகக் கஷ்டமான
சூழ்நிலையில் சேவையில் ஈடுபடுவது தெரிந்தும் எமக்கான தரிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் முயற்சி கள் எதனையும் மேற்கொள்ளாது அசமந்த போக்கில் இருக்கின்றது.
இந் நிலையில் ஐந்து மாவட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து மீண்டும் அமைச்சருடன் கலந்துரையாடி, எமது தரிப்பு நிலையத்தில் இருந்து சேவைகளை ஆற்ற முடியாத
நிலையைத் தெரிவிக்கும் முயற்சிகள் பலனளிக்காததால் தூர இடங்களுக்கான தனியார் போக்குவரத்துச் சேவைகளும், இலங்கை போக்குவரத்து சபையின் தூரசேவைகளும் புதிய தரிப்பிடத்தில் இணைந்து சேவைகளில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும் வரை வட மாகாணத்துக்கான அனைத்து தனியார் போக்குவரத்து சேவைகளும் நடைபெற
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது – என்றார்.