“ராஜபக்ஷக்களுடன் இணைந்து அரசியல் செய்வதற்கு நான் தயாரில்லை. மொட்டு கட்சி ராஜபக்ஷக்களின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும்வரை அக்கட்சியுடன் குறைந்தபட்சம் பேச்சுக்குகூட செல்லமாட்டேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் அக்கட்சியின் தவிசாளரான பொன்சேகா அரசியல் போரில் ஈடுபட்டுள்ளார். தனது கட்சி எம். பிக்கள் ஊடாக சொற்கணைகளைத் தொடுத்து வருகின்றார் .
இந்நிலையில் பொன்சேகாவுக்காக மஹிந்தவின் சலூன் கதவு திறந்தே உள்ளது என மொட்டு கட்சி தரப்பில் தெரிவிக்கப்படும் கருத்துகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக் கையிலேயே பொன்சேகா இவ்வாறு கூறினார்.
“ ராஜபக்ஷக்களுக்கு வெட்கம் இருக்குமானால் அவர்களும் என்னுடன் அரசியல் செய்யமாட்டார்கள். மொட்டு கட்சியில் சில நல்லவர்களும் உள்ளனர். எனினும், மொட்டு கட்சி ராஜபக்ஷக்களின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும்வரை எதுவும் சாத்தியப்படமாட்டாது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே வேட்பாளர் பெயரிடப்பட வேண்டும். ஒரு வருடத்துக்கு வேட்பாளரை அறிவித்து, வெற்றி தமக்கே எனக் கூறுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.” – எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.