கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேஷியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் ஏற்றப்பட்டிருந்த வெற்று கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்த இவர்கள் இருவரும் மலேஷியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
கடந்த வருடம் ஜனவரி 30 ஆம் திகதி மலேஷியா செல்வதற்காக கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த “மெர்க்ஸ் யூனிகார்ன்” என்ற கப்பலில் ஏற்றப்பட்ட வெற்று கொள்கலனுக்குள் குறித்த இருவரும் இரகசியமாக நுழைந்துள்ளனர்.
ஆனால் குறித்த கப்பல் மலேஷியாவை சென்றடைந்தபோது, அந்த கொள்கலனில் பதுங்கியிருந்த இரு சந்தேக நபர்களையும் ஏற்றுக்கொள்ள மலேஷியா மறுத்த நிலையில் சந்தேக நபர்களுடன் குறித்த கப்பல் சீனாவை சென்றடைந்தபோது சீன அதிகாரிகள் இவர்களை் இருவரையும் கைது செய்தனர்.
26 வயதான மதி ராஜேந்திரன் மற்றும் 39 வயதான ஜெயக்குமார் தர்மராசா ஆகிய இரு இலங்கையர்களே நாடு கடத்தப்பட்டவர்களாவர்.