ஐக்கிய குடியரசு முன்னணியின் “நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை” என்ற தலைப்பிலான முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (24) முற்பகல் கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது.
ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், குறித்த முன்மொழிவை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களில் கடுமையாக உழைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மறுசீரமைப்புத் தீர்மானங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மிகச்சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைவரினதும் ஆதரவுடன் அதனை மேலும் நடைமுறைப்படுத்துவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.